Published : 16 Dec 2021 11:48 AM
Last Updated : 16 Dec 2021 11:48 AM

ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் மோட்டார் வாகன அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ரூ1.97 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய அலுவலகத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் ஸ்டாலின் இன்று (16.12.2021) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள செய்யாறு, மோட்டார் வாகன அலுவலகத்திற்கு 1 கோடியே 97 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகளை வசூலித்தல், வாகனத் தணிக்கை போன்ற பல்வேறு பணிகளைச் சிறப்பாகவும், துரிதமாகவும் நிறைவேற்றிடவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத்துறை தொடர்பான சேவைகளைப் பெறவும் புதிய பகுதி அலுவலகங்களைத் தோற்றுவித்தல், பகுதி அலுவலகங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், ஓட்டுநர் தேர்வுத்தள வசதிகளுடன் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள செய்யாறு, மோட்டார் வாகன அலுவலகத்திற்கு 1 கோடியே 97 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம், பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், போக்குவரத்து ஆணையர் நடராசன், அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x