Published : 16 Dec 2021 11:00 AM
Last Updated : 16 Dec 2021 11:00 AM

மக்களிடம் ஒமைக்ரான் பரவல் அச்சத்தைப் போக்க வேண்டும்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை: ஒமைக்ரான் பரவல் அச்சத்தை மக்களிடம் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக நாடுகள் அனைத்தும் கரோனாவின் கோரப்பிடியில் இருந்து படிப்படியாக விலகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது கரோனாவின் மற்றொரு பிரிவான ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது.

ஒமைக்ரான் தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட 63 நாடுகளில் பரவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரானும் பிரிட்டனில் டெல்டா வகை கரோனாவும் அதிகம் பரவியுள்ளன.

முதல் கட்ட ஆய்வுத் தகவலின்படி கரோனா வைரஸ் தொற்றுவதையும் பரவுவதையும் தடுக்கும் தடுப்பூசியின் செயல் திறனை ஒமைக்ரான் வகை உருமாறிய வைரஸ் குறைத்துவிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்தபடியாக 5 வயதுக்கும் கீழ் இருக்கும் குழந்தைகள்தான் ஒமைக்ரான் தொற்றினால் அதிகம் பாதிப்படையும் பிரிவில் இருப்பதாக அந்நாட்டு மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி மாநிலத் தலைவர் முஸ்தபா

கரோனாவுக்குப் பின்னர் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துவிட்டது. நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னை வருகை தந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கும் புதிய வகை கரோனா இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களின் மாதிரியும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 41 பேருக்கு இதுவரை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகள் ஒமைக்ரான் தொற்றில் நாட்டு மக்களைப் பாதுகாக்க சர்வதேச விமான சேவைக்குத் தடை செய்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு அதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளால் இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் புகுந்துவிட்டது.

இந்தியாவில் பல மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் நுழைந்துவிட்ட ஒமைக்ரான் வைரஸ் தமிழக மக்களிடையே ஒருவித பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் அச்சத்தில் இருந்து மெல்ல மெல்ல தமிழக மக்கள் மீண்டு வரும் நிலையில் ஒமைக்ரான் வைரஸால் மீண்டும் ஒரு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற கவலை தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஆகவே தமிழக மக்களின் அச்சத்தைப் போக்கும் வண்ணம் ஆரம்ப நிலையிலேயே ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தி தமிழக மக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று முஸ்தபா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x