Published : 09 Mar 2016 07:40 AM
Last Updated : 09 Mar 2016 07:40 AM

இந்தியாவில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முழு சூரிய கிரகணம்: சென்னையில் 28 நிமிடங்கள் பார்க்கலாம்

இந்தியாவில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணத்தை சென்னையில் 28 நிமிடங்கள் பார்க்கலாம்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும். இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின்போது, சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போல் தெரியும். சூரிய கிரகணம் அமாவாசை தினத்தில்தான் நிகழும். பொதுவாக, ஓராண்டில் 2 முதல் அதிகபட்சம் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படலாம்.

முழு சூரிய கிரணம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் இன்று (புதன்கிழமை) நிகழ்கிறது. இந்தியாவில் பாதி சூரிய கிரகணத்தையே பார்க்க முடியும். ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, மைசூர், மங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சூரிய கிரகணத்தைக் காணலாம். சென்னையில் காலை 6.20 மணி முதல் 6.48 மணி வரை 28 நிமிடம் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.

சூரிய கிரகண நிகழ்வு தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய துணை இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது:

சர்வதேச அளவில், இந்திய நேரப்படி அதிகாலை 4:49 மணிக்கு கிரகணம் தொடங்கி காலை 10:05 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணத்தை பசிபிக் பெருங்கடல் பகுதி மற்றும் மத்திய இந்தோனேசியாவில் முழுமையாக பார்க்க முடியும்.

சூரிய கிரகணத்தை காலை 6 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் பார்க்கும் வகையில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு தொலைநோக்கி (டெலஸ்கோப்) வசதியும், வெல்டிங் கண்ணாடி வசதியும் செய்யப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x