Published : 12 Nov 2021 08:02 PM
Last Updated : 12 Nov 2021 08:02 PM

வளரட்டும் உங்கள் அறப்பணி: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு 

கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரைத் தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டியுள்ளார்.

பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாழ்த்தினார்.

மேலும், வாழ்த்து மடல் ஒன்றையும் வழங்கி பாராட்டினார்.

அந்த வாழ்த்து மடலில்,

''மன்னுயிர் ஓம்பி அருள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

நன்றிகளும் பாராட்டுகளும் உயிர் காக்க உதவாது என்பதனை நன்கு உணர்வேன். பேரிடர்க் காலங்களில் சுயநலம் பாராது உயிர்களைக் காக்கும் அறப்பணி செய்யும் தங்களைப் போன்ற காவல் துறையினர் வள்ளுவம் உயர்படப் பேசும் செல்வத்துள் செல்வமான அருட்செல்வத்தின் உடைமையாளர்கள். 'என்பும் உரியர் பிறர்க்கு' எனும் உயர் பண்போடு தாங்கள் ஆற்றிய அரும்பணிக்கு என் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அச்சமும் துயருமென்றே - இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்;
துச்சமிங் கிவர்படைகள் - பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்,
இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு
பெருநகர் உடலெனும் பெயரினதாம்.
.....
மும்மையின் உடைமைகளும் - திரு
முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்,
அம்மைநற் சிவசக்தி - எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்’

என்றார் பாரதி.

காணொலியில் ''ஓடு! ஓடு! ஓடு! உயிரைக் காப்பாற்றிடணும் எப்படியாவது... சரியா!'' என்று தாங்கள் விடுத்த அன்பான அறிவுறுத்தல் அன்பு கனிந்த கனிவே சக்தி என்பதை உறுதிப்படுத்தியது. வளரட்டும் உங்கள் அறப்பணி. நீதித்துறையின் வாழ்த்துகள்''.

இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாரட்டியுள்ளார்.

நடந்தது என்ன?

சென்னையில் கனமழை கொட்டிவரும் நிலையில், மாநகராட்சி உள்ளிட்ட பிற துறையினருடன் இணைந்து காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி போலீஸாருடன் அங்கு சென்றார்.

அங்கு கல்லறைகளுக்கு நடுவே இளைஞர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர், இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை செய்துள்ளார். அப்போது அந்த இளைஞரின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரைத் தனது தோளில் தூக்கிச் சென்று அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து அதில், அந்த இளைஞரை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மயங்கிக் கிடந்தவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த உதயா (25) என்பதும், அவர் கல்லறையில் தங்கிப் பணி செய்து வருவதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இளைஞரை மீட்டது தொடர்பாக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கூறும்போது, “நேற்று காலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவலர்கள் அய்யனார், சுரேஷ், அசோக் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்றேன். அங்கிருந்த இளைஞர் உயிருடன் இருப்பது தெரியவந்ததும் சற்றும் தாமதிக்காமல் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். தற்போது அவர் நலமாக இருக்கிறார். அவரைக் காப்பாற்றியது மனநிறைவைத் தருகிறது” என்றார்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் சேவையைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்.

குவியும் பாராட்டு

பெண் காவல் ஆய்வாளரின் இந்தச் செயலை பொதுமக்களும், காவல் அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டினர். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதாபிமான செயல்பாடு தமிழக காவல் துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அத்துடன், ராஜேஸ்வரியை நேரில் அழைத்து அவரது சேவையைப் பாராட்டிச் சான்றிதழும் வழங்கினார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x