Published : 23 Mar 2016 01:26 PM
Last Updated : 23 Mar 2016 01:26 PM

விஜயகாந்துடனான கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல்: அன்புமணி விமர்சனம்

தேர்தலுக்காக விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், "இது சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக, பாமக தவிர காங்கிரஸ், திமுக, வைகோ உள்ளிட்ட அனைத்து கட்சிகளோடும் பேசினார் விஜயகாந்த். அதற்கு பிறகு ஒரு முடிவை அறிவித்தார்.

தற்போது எடுத்திருக்கும் முடிவை 2, 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்திருக்கலாம். அவர் என்னவெல்லாம் பேசினார் என்பதை எல்லாம் ஊடகங்கள் மூலமாக பார்த்தேன். இன்று மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்திருக்கிறார்.

வைகோ பலமுறை மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம், ஜனநாயக மரபுகளை மதிக்கிறோம் என்றெல்லாம் கூறினார். ஆனால், இன்று முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவித்திருக்கிறார். இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் அவர்கள் விடை சொல்ல வேண்டும். தற்போது உள்ள அரசியல் சூழல் பாமகவிற்கு சாதகமாக இருக்கிறது. எங்களது வெற்றி உறுதியாகி இருக்கிறது.

திமுக, அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் ஒரே ஒரு நாள் மட்டுமே சட்டமன்றம் வந்தார். மற்ற நாட்கள் எல்லாம் மலேசியா, சிங்கப்பூர் என்று படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாதவர் விஜயகாந்த். அவர் முதல்வராகி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

முதல்வராக 93 வது கலைஞர் வேண்டுமா, 68 வயது ஊழல் செய்கின்ற, வீட்டை விட்டு வெளியே வராத ஜெயலலிதா வேண்டுமா, அரசியல் என்றால் என்னவென்று தெரியாத விஜயகாந்த் வேண்டுமா அல்லது இளைஞர் அன்புமணி வேண்டுமா என்று மக்களிடம் கேளுங்கள். கண்டிப்பாக மக்கள் என்னைத்தான் சொல்லுவார்கள்.

எங்களது கருத்துகள், சிந்தனைகள் தெளிவாக இருக்கின்றன. நாங்கள் தைரியமாக களத்தில் இருக்கிறோம். எங்களுக்கு கூட்டணி அவசியமற்றது. யாருடனும் கூட்டணி பற்றி பேச வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. மக்களுடைய நம்பிக்கையை இழந்த கட்சிகள் தான் கூட்டணிக்கு போகிறார்கள். இந்த அரசியல் சூழல் எங்களுக்கு சாதகம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x