Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM

138 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட 138 டன் பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சி நேற்று அகற்றியது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக சுமார் 5,100 டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. அவற்றை அகற்ற 358 கனரக மற்றும் இலகுரக காம்பாக்டர் மற்றும் டிப்பர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் 3 ஆயிரத்து 725 பேட்டரி மூலம் இயங்கும் 3 சக்கர வாகனங்களும் அன்றாட தூய்மைப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரமாகும் பட்டாசு குப்பை தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று பகல் 12 மணி வரை 138 டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தபட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பட்டாசு குப்பை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் “தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மன்ட் லிமிடெட்” நிலையத்துக்கு 33 தனி வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, பட்டாசு குப்பை தூய்மைப் பணியாளர்கள் மூலமாக தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x