Published : 02 Nov 2021 01:44 PM
Last Updated : 02 Nov 2021 01:44 PM

பயணம், பட்டாசு, தீ விபத்து; என்ன செய்யவேண்டும்?- காவல்துறை அறிவுரை

தமிழகத்தில் பொதுமக்கள் தீபாவளியைப் பாதுகாப்புடன் கொண்டாடக் காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இதுகுறித்துத் தமிழகக் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழகக் காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட, கீழ்க்காணும் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

1. கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கடை வீதிகள், மார்க்கெட் பகுதிக்குச் செல்ல வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

2. மருத்துவமனை மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3. உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி பட்டாசுகள் வெடித்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட வெடிகள், ராக்கெட்டுகள் வாங்கக் கூடாது, வெடிக்கவும் கூடாது. இதனால் தீ விபத்துகள் தடுக்கப்படும்.

4. பெற்றோர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் பட்டாசு வெடித்தல் வேண்டும், இதனால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

5. காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும்.

6. எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அவசர உதவி எண் 101 மற்றும் அவசரக் காவல் உதவி எண்கள் 100 மற்றும் 112 –ல் அழைக்கவும்.

7. வீட்டைப் பூட்டி வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் காவல் ரோந்து உங்கள் வீட்டிற்கு வருவதை உறுதிப்படுத்த முடியும்.

8. நடு இரவில் வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்கள், அவ்வப்போது ஓய்வு எடுத்துப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துகளைத் தடுக்கலாம்.

9. ரயில், பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் உடைமைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரவு முழுவதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

10. சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே காவல்துறைக்குத் தகவல் தரவும்''.

இவ்வாறு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x