Published : 21 Mar 2016 09:14 AM
Last Updated : 21 Mar 2016 09:14 AM

நீண்ட நாட்களுக்குப் பிறகு தேனி பக்கம் வந்த ஓபிஎஸ்: அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை

அதிமுகவில் 2-ம் இடத்தில் செல்வாக்கு மிகுந்தவராக வலம் வந்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட கட்சியினரிடம், பல கோடி ரூபாய் வசூல் செய்ததாக எழுந்த புகாரினால், கடந்த 15 நாட்களுக்கு மேலாக தேனி மாவட்டத்துக்கு வருகை தராமல், சென்னையிலேயே தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில், பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார். பின்னர் நேற்று காலை 10 மணியளவில் தேனியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது அதிமுக நிர்வாகிகளை சந்தித்து அவர் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார். இதேபோல, சில நாட்களுக்கு முன் தேனியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. இதனால் அக்கூட்டம் ஒத்திவைக்கப் பட்டது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: குமுளியில் நேற்று மாலை 3 மணிக்கு இடுக்கி மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, கேரள மாநில அதிமுக தேர்தல் பொறுப்பாளரான தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வந்திருந்தார். அதற்கு முன்னதாக, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை வேலுமணி தேனி கட்சி அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

ஏற்கெனவே கேரள உள்ளாட்சி தேர்தலில், தேனி மாவட்ட நிர் வாகிகள் பணியாற்றியுள்ளதால் அவர்களையும் குமுளி பொதுக் கூட்டத்துக்குச் செல்லும்படி நிதி அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, வேலுமணியுடன் அவர்கள் குமுளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அதன்பின் பகல் 12 மணிக்கு மேல் தனது போடி தொகுதிக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் கட்சி யினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், மாலை 4 மணிக்கு மேல் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயிலுக்குச் சென்று கைலாச நாதரை சிறிதுநேரம் வழிபட்டார். இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, தேனி பக்கமே வராமல் மவுனமாக இருந்த ஓ. பன்னீர் செல்வம், திடீரென சொந்த தொகுதிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசியது மாவட்ட அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x