Published : 17 Oct 2021 03:23 PM
Last Updated : 17 Oct 2021 03:23 PM

சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறப்பு?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

’’சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி 617 ஏக்கர் பரப்பளவு நிலப்பரப்பில் இந்திய அளவில் தொழிற்கல்வி நிறுவனங்களில் முதன்மையானதாக விளங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதக் கணக்கெடுப்பின்படி 188 நாய்கள் இந்த வளாகத்தில் இருந்துள்ளன. தன்னார்வலர்களால் வளர்த்து பாதுகாக்கிற பணியை ஐஐடி நிர்வாகம் ஏற்று, கண்காணிக்கிற பணியை ஒரு குழு அமைத்து மாதந்தோறும் கவனித்து வருகிறது.

இந்த வளாகத்தில் 10,600 சதுர அடியில் இரண்டு கொட்டகை அமைத்து 9 நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு, செல்லப்பிராணிகளுக்குத் தேவையான உணவு, அவற்றைப் பராமரிக்கிற பணிகளைச் செய்து வருகின்றனர். 14 நாய்கள் வெறித்தனம் இல்லாத வகையில் இருந்ததால் அவை வெளியில் விடப்பட்டிருக்கின்றன். கடந்த ஓர் ஆண்டில் 56 நாய்கள் இறந்துள்ளன. வெளியில் இருந்து வளர்க்கக் கேட்டவர்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான பட்டியலைக் கேட்டிருக்கிறோம்.

இங்கிருந்து 2 நாய்கள் தப்பித்து ஓடியுள்ளன. 87 நாய்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. 56 நாய்கள் இறப்புக்கான காரணம் என்னவென்று கேட்டபோது, உடல் நோய் காரணமாகவும், முதுமை நிலையிலும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் ஒரு நாயின் உடல் மட்டும் உடற்கூராய்வுக்கு கேட்டிருக்கிறார்கள். ஏனென்றால் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடற்கூராய்வு முடிவு வந்தபிறகு, நாய்கள் இறந்ததற்கான உண்மைத்தன்மை தெரியவரும்.

செய்தித்தாள்களில் நாய்கள் இறந்த செய்தி வந்தவுடன் சென்னை மாநகராட்சி இணை ஆணையர், துணை ஆணையர், கால்நடை பாதுகாப்பு அலுவலர் ஆகியோரோடு நேரடியாக ஆய்வு செய்துள்ளோம். ஐஐடி இயக்குநர், பதிவாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் சொல்லும் காரணம், இந்த ஐஐடி வளாகத்தில் 200 மான்கள் இருக்கின்றன. அதில் ஒரு அரிய வகை மானும் இருக்கிறது. இதில் குட்டி மான்களை
வேட்டையாடுவது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. அதற்கான புகைப்படம், வீடியோ போன்ற ஆதாரங்களைக் காண்பித்தார்கள். மான்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள். நாங்கள் அவர்களிடம் சொல்லியது, நாயும், மானும் இரண்டுமே உயிர்கள்தான். இரண்டு உயிர்களையும் ஒரேபோல் பராமரிக்கச் சொல்லியிருக்கிறோம்.

2018ஆம் ஆண்டு 92 மான்கள் இறந்திருக்கின்றன. அதில் 55 மான்கள் நாய் கடித்து இறந்துள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு 38 மான்களும், 2020ஆம் ஆண்டு 28 மான்களும், 2021ஆம் ஆண்டு 3 மான்களும் இறந்துள்ளன. இந்த ஆண்டுதான் குறைந்த எண்ணிக்கையில் மான்கள் இறந்துள்ளன. நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, இங்கு புதிதாக வருகிற நாய்களைப்பற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாய்களைக் கேட்டு வருகிற தன்னார்வலர்களிடம் பராமரிப்பதற்கான வசதிகள் அவர்களிடம் இருக்கிறதா? எனக் கண்டறிந்து அதன்பிறகு அவர்களிடம் வழங்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறோம். என்ஜிஓக்களிடம் கொடுத்து பராமரிக்கமுடியவில்லை என்றால் சிக்கலாகிவிடும். எனவே மாநகராட்சி சுகாதார அலுவலர்களும், கால்நடை பாதுகாப்புதுறை அலுவலர்களும் கண்காணித்து பிறகு, அவர்களிடம் தர வேண்டுமென்று தெரிவித்திருக்கிறோம்’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x