Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ய மேல்முறையீடு

சென்னை

பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிசெய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைசம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் தொடர்பாக டாக்டர் சுப்பையாவுக்கும், ஆசிரியரான பொன்னுசாமி தரப்புக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகசுப்பையா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதையடுத்து போலீஸார் ஆசிரியர் தம்பதிகளான பொன்னுசாமி, அவரது மனைவி மேரிபுஷ்பம், அவர்களது மகன்கள் வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ், பேசிலின் குடும்ப நண்பரான வழக்கறிஞர் வில்லியம், அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையாக செயல்பட்ட கபடி வீரர் ஏசுராஜன் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் முருகன், டிப்ளமோ பட்டதாரியான செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பலர் கைதான நிலையில், பலர் சரண்அடைந்தனர். ஐயப்பன் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக அப்ரூவராக மாறினார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, குற்றம் சாட்டப்பட்ட பொன்னுசாமி அவரது மகன்களான வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ் மற்றும் பேசிலின்நண்பரான வழக்கறிஞர் வில்லியம்,அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையாக செயல்பட்ட முருகன், செல்வப்பிரகாஷ் ஆகிய 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தும், மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி விசாரணை நீதிமன்றம், இந்தவழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையைதள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x