Published : 09 Oct 2021 01:56 PM
Last Updated : 09 Oct 2021 01:56 PM

சிறப்புக் குழந்தைகளுக்கான சங்கல்ப் பள்ளி: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை

சிறப்புக் குழந்தைகளுக்கான சங்கல்ப் (SANKALP) பள்ளியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’திருவள்ளூர் மாவட்டத்தில் சங்கல்ப் பள்ளி சுமார் 20 ஆண்டுகளாக சிறப்புக் குழந்தைகள் வாழ்வின் மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 200 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்திடும் வகையில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் கோலப்பன்சேரியில் புதிதாக சங்கல்ப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை, பேச்சுப் பயிற்சி சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், அக்குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்திடும் வகையில், தொழிற்கல்விப் பயிற்சி மூலம் நகை தயாரிப்பு, பரிசுப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், டேட்டா என்ட்ரி, சோப்பு தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, முகக்கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில் சிறப்புக் குழந்தைகளுக்கான சங்கல்ப் (SANKALP) பள்ளியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கல்ப் பள்ளியை சிறப்பான முறையில் நடத்தி வருவதற்காக அப்பள்ளி நிர்வாகிகளைப் பாராட்டி, வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சங்கல்ப் நிறுவன அறங்காவலர் முல்லாசரி அஜித் சங்கர்தாஸ், இயக்குநர்கள் சுபாஷினி ராவ், லட்சுமி கிருஷ்ணகுமார், சுலதா அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x