Last Updated : 09 Oct, 2021 12:48 PM

 

Published : 09 Oct 2021 12:48 PM
Last Updated : 09 Oct 2021 12:48 PM

அரியலூர்: ஆவின் பால் நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட மக்கள்.

அரியலூர்

அரியலூர் அருகே பணப் பட்டுவாடா புகார் காரணமாக ஆவின் பால் நிர்வாகத்தைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர், சின்னநாகலூர், காட்டுப்பிரிங்கியம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி, கறவை மாடுகள் வளர்ப்போரிடம் இருந்து பால் கொள்முதல் செய்யும் வகையில் பெரியநாகலூர் கிராமத்தில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கொள்முதல் செய்யப்படும் பால், அரியலூரில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் பெரியநாகலூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பால் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக முறையாகப் பணம் பட்டுவாடா செய்யவில்லை எனவும், பாலை முழுமையாகக் கொள்முதல் செய்வதில்லை எனவும் கடந்த சில நாட்களாக மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த கறவை பசுக்கள் வளர்ப்போர், கொள்முதல் நிலைய முகவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க இன்று (அக்.9) ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்படாத மக்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீஸாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதன், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு முக்கிய நபர்கள் சிலர் உள்ளே சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து அனைவரும் மறியலைக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x