Published : 29 Mar 2016 08:10 AM
Last Updated : 29 Mar 2016 08:10 AM

அதிமுக நேர்காணலுக்கு அழைப்பில்லை: நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுவாரா?- ஆதரவாளர்கள் அதிர்ச்சி



திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் தொகுதிக்கு நடைபெற்ற நேர்காணலில், அதிமுக நால்வரணியில் ஒருவரான மூத்த அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தவிர்க்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்வரின் விசுவாசிகள் பட்டியலில் இடம்பெற்று, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருந்த விஸ்வநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால், அதிமுக தலைமை அவருக்கு பல தடைகளை விதித்தது.

இதனால் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டங்களில் கூட தலை காட்டாமல் சென்னையிலேயே முகாமிட்டிருந்தார். கூட்டணிக் கட்சியினர் முதல்வர் சந்தித்த நிகழ்ச்சியின்போதும் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நேர்காணிலில் நத்தம் தொகுதிக்கு அமைச்சர் விஸ்வநாதனை தவிர்த்து ஒன்றிய செயலாளர் ஷாஜகான், சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர் ராமராஜ், சாணார்பட்டி ஒன்றியத் தலைவர் இன்பஜோதி ஆகியோர் அழைக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் விஸ்வநாதனுக்கு மீண்டும் நத்தம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏவாக உள்ள ஆத்தூர் தொகுதியில் சீட் கொடுத்தால் போட்டியிடுவீர்களா என முன்னாள் எம்பி சி.சீனிவாசனிடம் தலைமை கேட்டதற்கு, அவர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விஸ்வநாதனுக்கு ஆத்தூர் தொகுதியும் கிடைக்காது என்ற நிலை ஏற் பட்டுள்ளது.

இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும் நத்தம் விஸ்வநாதனை பொறுப்பாளராக நியமித்து, அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கட்சித்தலைமை கட்டளையிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும், கடைசி நேரத்தில் விஸ்வநாதனுக்கே நத்தம் தொகுதி கிடைக் கலாம் என அவரது ஆதரவாளர்கள் எதிர் பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x