மதுரையில் ஒரே நாளில் 1,500 தடுப்பூசி முகாம்கள்; முழுமையாக பயன்படுத்திக்கொள்க: பொதுமக்களுக்கு சு.வெங்கடேசன் வேண்டுகோள்

சு.வெங்கடேசன்: கோப்புப்படம்
சு.வெங்கடேசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரையில் ஒரே நாளில் 1,500 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ள நிலையில், அதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, மக்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (செப். 10) தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"மதுரை மாவட்டத்தை கோவிட் தொற்றின் மூன்றாம் அலையில் இருந்து பாதுகாக்க மதுரை மாவட்ட நிர்வாகம் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

தொற்றில் இருந்து மதுரையைக் காப்பதில் மிக அவசியமான பணி தடுப்பூசி செலுத்துவது. சில வாரங்களுக்கு முன் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது.

அதை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இப்பொழுது இரட்டிப்பு வேகத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளும், தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் அக்கறையோடு எடுத்து வருகின்றன.

வருகிற 12.09.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என, மொத்தம் 1,500 இடங்களில் தடுப்பூசி முகாம்களை மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இம்முகாம்களில் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மூன்றாம் அலையில் இருந்து மதுரையை காக்கும் பொறுப்பு நம் கைகளில் இருக்கிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் நிர்வாகம் எடுத்துள்ள இந்த பெரும் முயற்சியில் மதுரை மக்கள் அனைவரும் கரம் சேர்க்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். இப்பணியில் அன்றைய தினம் ஈடுபடவுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எனது அன்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்",

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in