Published : 08 Sep 2021 03:15 AM
Last Updated : 08 Sep 2021 03:15 AM

மின் பயன்பாட்டை செல்போனில் பார்த்து ப்ரீபெய்டு முறையில் மின் கட்டணம் செலுத்தலாம்: புதிய வசதி விரைவில் அறிமுகம் என மின்துறை அமைச்சர் தகவல்

சென்னை

மின்நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டு அளவை செல்போன் மூலம் பார்த்து உரிய நேரத்தில் ப்ரீபெய்டு முறையில் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி கொண்டு வரப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாரிலும், தேனி மாவட்டம் மணலாற்றிலும் தலா 500 மெகாவாட் நீரேற்று சேமிப்பு புனல்மின் திட்டம் செயல்படுத்தப்படும். பல்வேறு மாவட்டங்களில் 7500 மெகாவாட் மொத்த நிறுவுதிறன் கொண்ட 11 புதிய நீரேற்று திட்டங்கள் அமைக்கப்படும்.

மின் ஏல முறையில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திடம் இருந்து எரிவாயுவை கொள்முதல் செய்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கி அதற்கு ஈடாக மின்சாரம் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும். மூன்று ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் நடுத்தர காலஒப்பந்தம் மூலம் யூனிட் ஒன்றுரூ.3.26-க்கு 1,500 மெகாவாட் மின்கொள்முதல் செய்யப்படும்.

மின்தடை மற்றும் மின் வழித்தடங்களில் ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் கண்டறிய ரூ.1,270 கோடியில் மின்மாற்றிகள், சிறப்பு மின் அளவி பொருத்தப்படும்.

மின் நுகர்வோர்களுக்கு மின் பயன்பாட்டினை கண்காணிக்கவும், கணக்கீட்டாளர் இல்லாமல் இணையவசதி மூலமே மின் நுகர்வைக் கணக்கிடவும் மின் இணைப்புகளில் வினைத்திறன் மிகு மின்அளவி (Smart Meter) பொருத்தப்படும்.

இதன்மூலம் மின் நுகர்வோர் தாங்கள் உபயோகித்த மின்சார அளவை தங்கள் செல்போனில் எந்தநேரமும் பார்க்க முடியும். மேலும், மின் கட்டணத்தை போஸ்ட் பெய்டு அல்லது ப்ரீபெய்டு வசதி மூலம் மின் இணைப்பு துண்டிப்பு தேதிக்குமுன்பே ரீசார்ஜ் முறை மூலம் செலுத்திவிட்டு, மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்கலாம்.

தடையற்ற மின்சாரம் வழங்க ரூ.1,979 கோடியில் 159 புதிய துணைமின் நிலையங்கள் நிறுவப்படும். ரூ.125 கோடியில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். ரூ.679 கோடியில் புதிய மின்மாற்றிகள் அடுத்த 3 ஆண்டுகளில் அமைக்கப்படும். சீரான மின் விநியோகத்துக்காக ரூ.5,050 கோடியில் 900 பீடர்களில் உயர் மின் அழுத்த பகிர்மான அமைப்பு நிறுவப்படும்.

சென்னை மாநகரம் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகர பகுதிகளில் மேல்நிலை மின்பாதைகள், புதை வடங்களாக மாற்றப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x