Published : 07 Sep 2021 03:05 PM
Last Updated : 07 Sep 2021 03:05 PM

பள்ளிப் புத்தகப் பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருப்பில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் அச்சிடப்பட்ட நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகளைக் கைவிடும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 'நமது திராவிட இயக்கம்' என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

அந்த மனுவில், தற்போது இருப்பில் உள்ள நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களில் உள்ள முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வழங்கலாம் எனவும், அதை விடுத்து, இருப்பில் உள்ள நோட்டுகள், பைகளை விநியோகிக்காமல் தவிர்ப்பதன் மூலம் பொதுமக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படுவதாகவும், மாறாக அவற்றை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் இன்று (செப். 07) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், முன்னாள் முதல்வர் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தகப் பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது எனவும், அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், பள்ளிப் புத்தகப் பைகளில் படத்தை அச்சிடுவதை முதல்வர் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பள்ளி மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால், புத்தகப் பைகள், புத்தகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை அச்சிட்டு, அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

அரசு நிதி, விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பள்ளிப் புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாது எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x