Published : 07 Sep 2021 02:41 PM
Last Updated : 07 Sep 2021 02:41 PM

பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி

பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்ததற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (செப். 07) வெளியிட்ட அறிக்கை:

"சுதந்திரப் போராட்ட வீரர்களையும், சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கப் பாடுபட்டவர்களையும், தன்னலமற்ற மக்கள் சேவை புரிந்தவர்களையும், மக்களின் உரிமைகளை மீட்கப் போராட்டங்களை நடத்தியவர்களையும், சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தவர்களையும் கவுரவிக்கும் வகையில், அவர்களுக்குத் திருவுருவச் சிலைகள் அமைப்பதையும், நினைவு மண்டபம் கட்டுவதையும், அரசுக் கட்டிடங்களுக்கு அவர்களின் பெயர்களை வைப்பதையும் அதிமுக தனது ஆட்சிக் காலத்தில் வழக்கமாகக் கொண்டிருந்தது.

இந்திய விடுதலைக்கு முன், மொழிப் பற்றினையும், நாட்டுப் பற்றினையும், ஒருமைப்பாட்டினையும், காவிரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலை உணர்வினை ஊட்டியவர் பாரதியார் என்றால், விடுதலைக்குப் பின் பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மானம், சமூக நீதி ஆகியவற்றை மக்களிடையே பரப்பி தமிழகத்தில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பெரியார்.

பெரியார் வகுத்துத் தந்த பாதையில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற பெருமை அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரையே சாரும். சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம், சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்களைப் பெருமைப்படுத்தும் பணியையும் செய்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைப் பாதுகாத்ததற்காக, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழகம் வழங்கி கவுரவித்தது என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

"அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து போகாமல் எவன் சொன்ன சொல்லானாலும் பகுத்தறிந்து உள் அறிவால் உணர்" என்று சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதை வற்புறுத்தி, மக்களிடையே எடுத்துச் சென்று தமிழகத்தில் ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்திய பெரியாரைப் பெருமைப்படுத்தும் வகையில், அவர் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

இந்த அறிவிப்புக்குக் காரணமான முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதனை அதிமுகவின் சார்பில் வரவேற்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x