Published : 22 Aug 2021 03:12 AM
Last Updated : 22 Aug 2021 03:12 AM

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம்: சென்னையில் நடந்த தேசிய விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்

கோப்புப் படம்

சென்னை

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற தேசிய விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேளாண் பிரச்சினைகள் மீதான இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகள் மாநாடு ‘தண்ணீர் மனிதர்’ராஜேந்திர சிங் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டி.குருசாமி இந்த மாநாட்டின் நோக்கம் குறித்துப் பேசும்போது, “நம் நாட்டின் மாறுபட்ட பருவநிலை, அரசியல், சமூகம், பொருளாதாரச் சூழல் காரணமாக வடக்கு, தெற்கு மற்றும் மாநில நிர்வாகச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துன்பங்களுக்கு நிரந்தர அரசியல் மற்றும் நிர்வாகத் தீர்வுகள் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யவும், தொடர்ந்து பேசவும் சென்னையில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதில் பாரதி கிசான் சங்க தலைவர் ராகேஷ் திக்காயத், பொதுச் செயலாளர் யுத்வீர்சிங், வேளாண் பொருளாதார நிபுணர் டாக்டர் தேவேந்திர சர்மா, நில உடமை இயக்க தேசியத் தலைவர் பி.வி.ராஜகோபால் சிறப்புஅழைப்பாளராக பங்கேற்றனர்.

பல்வேறு மாநில பிரதிநிதிகள்

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, பிஹார், உத்தர பிரதேசம், பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளும், தமிழகப் பிரதிநிதிகளாக புதுக்கோட்டை ஜி.எஸ்.தனபதி, வேதாரண்யம் பார்த்தசாரதி, சிதம்பரம் ரவீந்திரன், நல்லா கவுண்டர், சங்கரய்யா, வழக்கறிஞர் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

அவர்கள் கூறும்போது, ‘‘மத்தியஅரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் நடைபெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் அரசியல்ரீதியான அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் உரிய விவாதங்களுக்கு இடம் கொடுக்காமல் நிறைவேற்றப்பட்ட மிகுந்த பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும்.வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய சட்டம் இயற்றப்பட வேண்டும். அதாவது உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து ஒவ்வொருவேளாண் பொருளுக்கும், ஒவ்வொரு பருவத்துக்கும் நிர்ணயம்செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு அனைத்துமாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வேளாண் சீர்திருத்த நடைமுறைகள் அமலாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நிபுணர் குழு அமைத்து தீர ஆலோசனைகள் செய்ய வேண்டும்.

சட்ட நிறைவேற்றத்துக்கு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கங்களை அரசு அழைக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவில் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x