Published : 12 Feb 2016 08:17 AM
Last Updated : 12 Feb 2016 08:17 AM

சாத்தூர், விராலிமலை, திண்டிவனம் உட்பட 5 இடங்களில் புதிதாக அரசு ஐடிஐ: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சாத்தூர், விராலிமலை, திண்டிவனம் உட்பட 5 இடங்களில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை (ஐடிஐ) முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூர், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் ஆகிய இடங்களில் புதி தாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினருக்கென திருவள்ளூர் மாவட்டம் வடகரையிலும், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை வாசிகளுக்காகவும் அமைக்கப் பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய கிளைகள் உட்பட மொத்தம் ரூ.9 கோடியே 77 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் திறந்துவைத்தார்.

மேலும் பெரம்பலூர் (தெற்கு), நாகர்கோவில், தருமபுரி மாவட்டம் விருப்பாட்சிபுரம், திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி, விருதுநகர் கூரைக்குண்டு, திருநெல்வேலி குலவணிகர்புரம், தஞ்சை பிள்ளை யார்பட்டி, நாமக்கல் சிலுவம்பட்டி, சிவகங்கை கஞ்சிரங்கல், தேனி அல்லிநகரம், கரூர் தாந்தோணி, புதுக்கோட்டை நத்தம்பண்ணை, கடலூர் மஞ்சக்குப்பம், தூத்துக் குடி ஐயன்அடைப்பு, வேலூர் மேல்மொணவூர், சேலம் ஐயம் பெருமாள்பட்டி, நாகை காடம்பாடி, ஈரோடு காசிப்பாளையம் ஆகிய கிராமங்களில் ரூ.49 கோடியே 40 லட்சத்தில் கட்டப்படவுள்ள சட்ட முறை எடையளவு ஆய்வகத்து டன்கூடிய ஒருங்கிணைந்த தொழி லாளர் துறை அலுவலக வளாகங் களுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள கட்டு மானத் தொழிலாளர்களுக்கு அவர்களின் பணியிடம் தேடி சுகாதார சேவைகள் வழங்கும் வகையில், மருத்துவக் குழு மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள 3 நகரும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் தொடங்கிவைத்தார்.

பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடங்களில் விபத்து ஏற்பட்டு இறக்கும்போது வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, கட்டு மானப் பணியின்போது விபத்துக் குள்ளாகி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரின் மனைவி பானுமதி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மிக்கேல் ஜஸ்டினின் மனைவி ஜே.சகாய வினிஸ்டாள் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூரில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில்மைய அலுவலகம், அரியலூர் மாவட்ட தொழில் மைய கட்டிடம், சென்னை கிண்டி மண்டல இணை இயக்குநர் அலுவலகம் ஆகிய இடங்களில் ரூ.3 கோடியே 18 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடங்கள், தூத்துக்குடி, காஞ்சிபுரத்தில் ரூ.3.91 கோடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மைய கூடுதல் கட்டிடங்கள் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மொத்தம் ரூ.30 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களையும் முதல் வர் திறந்துவைத்தார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x