Last Updated : 20 Jun, 2014 12:00 AM

 

Published : 20 Jun 2014 12:00 AM
Last Updated : 20 Jun 2014 12:00 AM

நாம் போனால் என்ன.. உறுப்புகள் வாழட்டுமே! - உடல் உறுப்பு தானம் பற்றி மக்கள் கருத்து

திருக்கழுக்குன்றம் பிளஸ்1 மாணவர் ஹிதேந்திரன் 2008-ல் மூளைச்சாவு அடைந்த பிறகு, அவரது இதயம் உள்பட பல உறுப்புகளும் பலருக்கு பொருத்தப்பட்டது.

இச்சம்பவம் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதேபோல, மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து அவரது இதயம் அகற்றப்பட்டு மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 16-ம் தேதி வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை இச்சம்பவம் மேலும் அதிகரித்துள்ளது. உறுப்பு தானம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்..

ஹேமலதா, இல்லத்தரசி, ராயப்பேட்டை

உறுப்பு தானம் வரவேற்கத்தக்க விஷயம். எல்லாருக்கும் இதுபற்றிய விழிப்புணர்வு வரணும். இறந்து போகும்போது உறுப்புகளை தானம் பண்றதால, அந்த உறுப்பு கிடைக்காம போராடுறவங்களுக்கு உயிர் கிடைச்சா மாதிரி இருக்கும். நானும் உறுப்பு தானம் கண்டிப்பா செய்வேன்.

வெங்கடேசன், ஆட்டோ ஓட்டுநர், சேப்பாக்கம்

உறுப்பு தானம் உயிரை காப்பாத்தக்கூடிய விஷயம். இத மாதிரி நிறைய பேர் பண்ணனும். அப்படி ஒரு சூழ்நிலையில நானும் கண்டிப்பா உறுப்பு தானம் செய்வேன். வீணா போற கண், சிறுநீரகம் எல்லாம் மத்தவங்களுக்கு கொடுத்து இன்னொரு உயிரை காப்பாத்தி நாம உதாரணமா இருக்கணும். ஒரு உயிர் போனாலும், பல உயிரை வாழவைக்கிறது பெரிய விஷயம்.

ரமா, இல்லத்தரசி, திருவல்லிக்கேணி

மகன் இறந்துபோனாலும் அவரோட உறுப்புகளை மத்தவங்களுக்கு தானம் பண்ணிருக்காங்க. பையன திரும்ப உயிரோட பாக்கறா மாதிரி இருக்கும். எல்லாருக்கும் இந்த எண்ணம் வரணும். லோகநாதன் ஆத்மா சாந்தி அடையணும். அவரைப் பெத்தவங்க நல்லா இருக்கணும்.

உமா, அரசு ஊழியர், சேப்பாக்கம்

லோகநாதனின் பெற்றோர் செய்திருப்பது மிகப்பெரிய தியாகம். இந்த மாதிரி தியாக மனப்பான்மை, நல்ல மனசு எல்லாருக்கும் வரணும். எத்தனையோ பேர் கஷ்டப்படறாங்க, இந்த மாதிரி தானம் பண்ணா, அவங்க வாழ்க்கை நல்லபடியா அமையும். நானும் கண்டிப்பா செய்வேன்.

அட்சயா, மயிலாப்பூர்

இறந்த பிறகு உறுப்புகள் மண்ணுக்கு போறதுக்கு பதிலா, இன்னொருத்தருக்கு கொடுத்து உதவுறது நல்ல விஷயம். நாம இறந்தாலும் நம்ம உறுப்புகள் இன்னொருத்தங்க மூலமா வாழ்வது பெரிய பாக்கியம்.

செல்வம், பொற் கொல்லர், சென்னை

உன்னதமான, புனிதமான காரியம் இது. லோகநாதனோட தானத்துனால 21 வயசுப் பெண்ணின் உயிர் காப்பாத்தப் பட்டிருக்கு. நாமளும் இப்படி தானம் பண்ணா பல உயிர்கள் வாழும். நான் போன அப்புறம் என்னோட உறுப்புகளாவது உயிர்வாழட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x