Last Updated : 19 Aug, 2021 06:10 PM

 

Published : 19 Aug 2021 06:10 PM
Last Updated : 19 Aug 2021 06:10 PM

உள்ளாட்சித் தேர்தல்: புதுச்சேரிக்கு வந்த 2 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலைத் தெலங்கானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் பாரதிதாசன் கல்லுாரியில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. | படம்: எம்.சாம்ராஜ்.

புதுச்சேரி

உள்ளாட்சித் தேர்தலையொட்டி தெலங்கானாவிலிருந்து 2 கன்டெய்னர் லாரிகளில் புதுச்சேரிக்கு 2 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (ஆக.19) வந்தடைந்தன.

புதுவை மாநிலத்தில் அக்டோபருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வார்டுகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெலங்கானா மாநிலத்திலிருந்து இன்று (ஆக.19) புதுச்சேரிக்கு வந்தன. மொத்தம் 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.

புதுவை பாரதிதாசன் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ரிஷித்தா குப்தா, துணை ஆட்சியர்கள் கந்தசாமி, முரளிதரன், தாசில்தார் பாலாஜி, வருவாய் அதிகாரி செந்தில்குமார் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கண்டெய்னர் லாரிகள் திறக்கப்பட்டன. மொத்தம் 2 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன.

இவை அனைத்தும் பத்திரமாக ஸ்ட்ராங் ரூம் அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்குள்ளும், அவ்வளாகத்திலும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு, போலீஸ் பாதுகாப்பு என மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுவை மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த இப்போது 2 ஆயிரம் இயந்திரங்கள் தெலங்கானாவில் இருந்து பெறப்பட்டுள்ளன. எஞ்சிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் கர்நாடகாவிலிருந்து அடுத்த வாரம் 1500 இயந்திரங்கள் வர உள்ளன. ஏற்கெனவே உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x