Published : 19 Aug 2021 05:35 PM
Last Updated : 19 Aug 2021 05:35 PM

ரூ.200 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்குக் கற்பித்தல் வாசிப்பு இயக்கம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: கோப்புப்படம்

சென்னை

200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களுக்குக் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் மீதான பதிலுரையை இன்று (ஆக. 19) சட்டப்பேரவையில் ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

"கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்புகள் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றைச் சரிசெய்திட மாபெரும் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் தமிழகமெங்கும் செயல்படுத்தப்படும். இதன் முழு விவரங்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பார்.

இதனுடைய அம்சம் என்னவென்றால், ஒன்றரை வருடம் இங்கே வகுப்புகள் நடக்காத சூழ்நிலையில், திடீரென்று மாணவர்களைப் பள்ளிகளுக்கு திருப்பி அழைத்து உடனடியாக அவர்களை வகுப்புகளில் சேர்த்தால், பலர் வரமாட்டார்கள். பலர் வந்தாலும் கற்றுக்கொள்ள முடியாது. பல ஆசிரியர்களுக்குச் சில காயங்கள் இருக்கலாம்.

ஏற்கெனவே வெளிப்படையாக நிறைய தகவல்கள் வருகின்றன. குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைத் தொழிலாளர்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். நிரந்தரமாக சில பேர் படிப்பை நிறுத்திவிட்டார்கள் என்ற சூழ்நிலை உருவாகியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது.

அதையெல்லாம் திருத்தும் வகையில் ஒரு மிகச் சிறந்த திட்டத்தை வெளியிடுகிறேன். தற்போது இந்த நிதியாண்டின் முதல் ஒதுக்கீடாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்துப் பள்ளிக் கல்வி மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் பள்ளி நேரத்துக்குப் பிறகு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்".

இவ்வாறு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x