Published : 18 Feb 2016 09:51 AM
Last Updated : 18 Feb 2016 09:51 AM

தீமைகளை துறக்கும் மனமாற்றமே தீர்த்த யாத்திரையின் பயன்

கவிஞராக அறிமுகமாகி, இதழாசிரியராகச் செயல்பட்ட மகாகவி பாரதியார், தனது ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளைத் தவறாமல் கட்டுரை, கவிதை வடிவில் பதிவு செய்தவர். அவை, சுதேசமித்திரன், இந்தியா, சக்ரவர்த்தினி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

அந்த வரிசையில் குடந்தையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் திரு விழாவும் இடம்பெற்றுள்ளது. அவரது வாழ்நாளில் 1909 மற்றும் 1921-ம் ஆண்டுகளில் குடந்தையில் கொண்டாடப்பட்ட மகாமகத் திருவிழாவைப் பற்றி 2 சிறப்புக் கட்டுரைகளை எழுதி யுள்ளார். அவர் வேறு எந்த ஊர்களிலும் நடைபெற்ற சமய விழாக்களை குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியதில்லை.

1909-ம் ஆண்டு மகாமக விழா குறித்து மார்ச் முதல் நாள் வந்த சுதேசமித்திரன் இதழில் பாரதி எழுதியுள்ளார்.

மகாமகம் பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், சில சமயம் இதில் சிறிய மாறுதல் நிகழும் என்பதை பாரதி பதிவுசெய்துள்ளார். மகாமக விழா, குரு ராசிகளுக்குச் செல்வதைப் பொறுத்து 11-வது ஆண்டிலும், 13-வது ஆண்டிலும்கூட கொண்டாடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பாரதியார், ‘‘மகாமக மெனப்படுவது, தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவான் சிம்ம ராசியில் சேர்ந்து, சிம்ம ராசிக்கு உடையவனாகிய சூரியன் அதற்கு 8-ம் இடமாகிய கும்ப ராசி சேர, சந்திரன் குருவுடன் சேர்ந்து சம நோக்காக நிற்கும் பவுர்ணமி தினமேயாகும். இத்தினம் பிரபவாதி வருஷங்களில் முக்கியமாய் பவ, விய, விளம்பி, சாதாரண, துந்துபி எனும் வருஷங்களில் கொண்டாடப்படும்.

ஆனால், அதிசாரத்தினாலாவது அக்கிரத்தினாலாவது குரு, இம் முறை தப்பி ஒரு வருஷம் முந்தியோ அல்லது ஒரு வருஷம் பிந்தியோ சிம்ம ராசிக்கு வருவது உண்டு.

அவ்வருஷத்தில் மகாமகம் பன்னிரண்டு வருஷக் குறைவிலேனும், பன்னிரண்டுக்கு அதிகப்பட்ட கணக்கிலேனும் கொண்டாடப்படும்” என எழுதியுள்ளார்.

இதுபோலவே, 1921-ல் நடை பெற்ற மகாமகத் திருவிழா குறித்து, சுதேசமித்திரனில் மீண் டும் ஒரு பெரிய கட்டுரையை ‘மகாமகம்’ என்ற தலைப்பில் பாரதி எழுதி யுள்ளார். அதில் தம் எழுத்துகள் வாயிலாக, வாசகர்களைக் குடந்தைக்கே அழைத்துச் சென்று புனித நீராடச் செய்துள்ளார்.

“மதப்பற்றுடையார் அஃதற்றார் என்று இரு திறத்தாரும் உணர்ந்து கொள்ளும்படி, இதுபோன்ற தீர்த்த யாத்திரைகளின் தத்துவத்தை இங்கு விளக்குவோம்.

இவற்றில் பாவமழிந்து புண்யத் தன்மை பெற வேண்டுமானால், உண்மையான நம்பிக்கையிருக்க வேண்டுமென்று நம்முடைய புராதன ஹிந்து சாஸ்த்ரங்கள் மிகத் தெளிவாக வற்புறுத் தியிருக்கின்றன. உண்மையான மனக் கோளின்றி கங்கையில் முழுகினாலும், மஹாமகத்தில் முழுகினாலும் பாப கர்மந் தொலையாதென்று சாஸ்த்ரங்கள் தெளிவுபடத் தெரிவிக்கின்றன. இனிமேல் நாம் பாவம் பண்ணுவதில்லையென்ற மனம் நிச்சயம் வேண்டும். இந்தத் தீர்மானந்தான் பரிசுத்தத் தன்மையை கொடுக்கிறது.

ஒருவன் இந்த க்ஷணம் முதல் பாவம் செய்வதில்லையென்று மனவுறுதி செய்துகொள்ளு தலாகிய செய்கையாலேயே அதுவரை செய்த பாவமெல்லாம் எரித்துவிடப்படுகிறது” என்று பாரதியார் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தீமைகளைத் துறந்து, இனி இந்த நிமிடம் முதல் நன்மையே செய்ய வேண்டும் என்ற ஒருவனின் மன மாற்றமே தீர்த்த யாத்திரையின் அர்த்தமும் பயனும் என்ற மகாகவியின் விளக்கம் சமயப்பற்று மிக்கவர், இறை நம்பிக்கையில்லாதவர் என அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையில் விவிலியம் உள்ளிட்ட சமய நூல்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

இவ்வாறு பாரதி சிறப்பித்துப் பெருமை சேர்த்த மகாமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.

இல.சொ.சத்தியமூர்த்தி

தலைமை குற்றவியல் நடுவர், (திருவாரூர்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x