Published : 13 Aug 2021 06:36 PM
Last Updated : 13 Aug 2021 06:36 PM

அமைப்புசாராத் தொழிலாளர் பிரச்சினைகளைப் பார்க்கத் தவறியது ஏன்?- இந்தியக் கம்யூனிஸ்ட்

சமூகத்தின் பல்வேறு தரப்பினர் குறித்தும் கவனம் செலுத்திய நிதியமைச்சரின் அறிவார்ந்த பார்வையில் அமைப்புசாராத் தொழிலாளர் பிரச்சினைகள் படாமல் தவறியது எப்படி? அல்லது பார்க்கத் தவறியது ஏன்? என்ற வினாக்கள் எழுவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள புதிய திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இன்று (13.08.2021) சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது முதல் வரவு - செலவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

இது முந்தைய ஆட்சியினர் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த இடைக்கால வரவு - செலவு நிதிநிலை அறிக்கையின் தொடர்ச்சியாக அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கான திருத்தப்பட்ட வரவு - செலவு அறிக்கையாகும்.

நான்கு நாட்களுக்கு முன்பு (09.08.2021) வெளியிட்ட வெள்ளை அறிக்கை முந்தைய அரசின் நிர்வாக திறனும், அரசியல் உறுதியும் இல்லாத பலவீனத்தையும், பெரும் நிதியிழப்புகளுக்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்தியது. இதனை ஆதாரப்படுத்தி மானியங்கள் வெட்டப்படும், புதிய புதிய வரிகள் விதிக்கப்படும், பல்வேறு பகுதியினரின் சலுகைகள் நிறுத்தப்படும் எனப் பரபரப்பாக பரப்புரை செய்யப்பட்ட பொய் செய்திகளை நிதிநிலை அறிக்கை பொய்யாக்கியுள்ளது.

உழைக்கும் பெண்கள், திருநங்கையர் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்திற்கு உத்தரவிட்டது உலகின் கவனத்திற்கு ஈர்த்துள்ளது. கரோனா நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களுக்கு ரொக்கப்பணம் ரூ.4,000 கொடுத்ததுடன், பெற்றோர்களை இழந்த குழந்தைகள் 5 ஆயிரத்து 963 பேர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டிருப்பது காலத்திற்கும் நிலைத்து நிற்கும் சாதனையாகும்.

இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வரும் அரசியல் சலுகைகளும், மானியங்களும் தொடரும் என்பதுடன் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்து, ரூ.1,160 கோடி வருவாய் இழப்பை ஏற்கும் அரசியல் உறுதியைத் தொழிலாளர்களும், மாத ஊதியப் பிரிவினரும் நன்றி பாராட்டி மகிழ்வார்கள். அதேசமயம் டீசலின் மீதான வரி எப்போது குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சிறு தொழில் நிறுவனங்கள் எதிர் கொள்ளும் இடர்ப்பாடுகளைக்களைந்திட வல்லுநர்கள் கொண்ட குழு அமைப்பது, தமிழ்நாட்டின் தனித்தன்மைகளை உள்வாங்கி, எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் புதிய கல்விக் கொள்கை வகுக்கும் குழு அமைப்பது போன்றவை அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும்.

கூட்டாட்சி கோட்பாட்டைத் தகர்ந்து வரும் மத்திய அரசின் தாக்குதலைப் பட்டியலிடும் நிதிநிலை அறிக்கை, அதனை எதிர்கொள்ளும் மாற்றுத் திட்டங்களில் கவனம் செலுத்தியிருக்கிறது. இந்த வகையில் பொருளாதார மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்டு வருவாய் மற்றும் வரிவிதிப்பு ஆலோசனைக்குழு நிறுவுவது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் சமூகத்தின் வரலாற்று அறிதலுக்காகத் தொல்லியல் ஆய்வுப் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது, தமிழ் மொழியின் வளமையை, வளர்ச்சியை வரிசைப்படுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் கீழ் மேலும் ஏழு தொகுதிகள் கொண்டு வருவது, செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு ஆகியவை வரவேற்கத்தக்கவை.

சட்டப்பேரவைச் செயலகத்தின் ஆரம்பகால ஆவணங்கள் தொடங்கி அரசு ஆவணங்கள் அனைத்தும் கணினிமயப்படுத்துவதும், பொது மக்கள் பயன்பாட்டிற்கு இணையவழி அளிப்பதும் அரசின் வெளிப்படைத்தன்மை செயல்பாட்டை நோக்கியதாகும். வாகன உற்பத்தி, அலைபேசி கருவிகள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப சேவைத்துறை போன்றவை உலகமயப் பொருளாதாரத்துடன் இணைந்துள்ளதன் தாக்கம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வெளிப்பட்டு வருகிறது. மேலும் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும்போது ஏற்படும் விளைவுகள், எதிர்மறைப் போக்குகள் குறித்து எச்சரிக்கை தேவை என்பதையும் நிதியமைச்சர் உணர்ந்திருக்க வேண்டும்.

சமூகத்தின் பல்வேறு தரப்பினர் குறித்தும் கவனம் செலுத்திய நிதியமைச்சரின் அறிவார்ந்த பார்வையில் தொழிலாளர் நலன், பணிப்பாதுகாப்பு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர் பிரச்சினைகள் படாமல் தவறியது எப்படி? அல்லது பார்க்கத் தவறியது ஏன்? உழைப்பு சக்தி சமூக இயக்கத்தின் உயிர் ஆற்றல் என்பதை நன்கு அறிந்திருக்கும் அவர் எப்படி மறந்து போனது ஏன் என்ற வினாக்கள் எழுகின்றன.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டும் அல்ல, நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நடைபோட வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் அரசின் நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது''.

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x