Published : 21 Feb 2016 12:46 PM
Last Updated : 21 Feb 2016 12:46 PM

தந்தை உடல்நலம் பாதிப்பு: பேரறிவாளனுக்கு உடனடியாக சிறைவிடுப்பு வழங்க வேண்டும்- ராமதாஸ்

உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சிறை விடுப்பு (பரோல்) வழங்க கோரி பேரறிவாளன் சார்பில் மனு அளிக்கப்பட்டு பல நாட்களாகியும் அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தந்தையின் உயிரை காக்க மகனாக ஆற்ற வேண்டிய கடமையை செய்வதற்குக் கூட அனுமதியளிக்க தமிழக அரசு தயங்குவது கண்டிக்கத்தக்கது.

பேரறிவாளனின் தந்தையும் தமிழாசிரியருமான குயில்தாசன் ரத்த அழுத்தம், முதுகுத் தண்டுவட வலியால் அவதிப்பட்டு வருகிறார். 25 ஆண்டுகளாக அப்பாவி மகனைப் பிரிந்து மன உளைச்சலில் வாடும் அவர் சிகிச்சை பெற மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. கடுமையான உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுரை வழங்கியிருப்பதாகவும், ஆனால், பேரறிவாளன் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து தந்தையின் சிகிச்சையை கருத்தில் கொண்டு பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்பே மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு முன் சிறை கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்தவர் அம்மனுவை அரசின் ஆய்வுக்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. வேலூர் சிறைக்கு புதிய கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற பின்னர் ஒரு வாரத்திற்கு முன்பு தான் அம்மனு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு பெற அனைத்து தகுதிகளும் இருந்தும், ஒரு உன்னத நோக்கத்திற்காக அதை வழங்குவதற்கு, தமிழக அரசு தயங்குவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார் மகாத்மா காந்தி. ஆனால், அவரைத் தேசத் தந்தையாக போற்றும் நாட்டில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளையெல்லாம் சுதந்திரமாக உலவவிட்டு, நிரபராதிகளை மட்டும் குற்றவாளிகளாக சித்தரித்து தண்டிக்கும் கொடுமை தான் நடந்து கொண்டிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் சிறிதும் தொடர்பற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் வாழ்நாள் சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது. வழக்கமாக வாழ்நாள் சிறை தண்டனை பெற்றவர்கள் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படும் நிலையில் 25 ஆண்டுகளாகியும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் சிறைக் கொட்டடியிலிருந்து விடுதலையாக முடியவில்லை.

மும்பை தொடர்குண்டு வெடிப்பில் குற்றஞ்சாற்றப்பட்டு ஆயுத வழக்கில் தண்டிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனைக் காலம் நவம்பர் மாதம் முடிவடையவிருக்கும் நிலையில், இந்த மாதமே விடுதலை செய்யப்படவிருக்கிறார். இத்தனைக்கும் தண்டனை காலத்தில் 146 நாட்களை சிறை விடுப்பில் வெளியில் கழித்திருக்கிறார். ஆனால், 25 ஆண்டு கால சிறை வாசத்தில் இதுவரை ஒரு நாள் கூட சிறை விடுப்பில் செல்லாத பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இந்த பாகுபாட்டையெல்லாம் பார்க்கும் போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மிகப்பெரிய கேலிக்கூத்தாக தோன்றுகிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாழ்நாள் சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவர்கள் மூவரையும், ஏற்கனவே தண்டனை குறைப்பு வழங்கப்பட்ட நளினி உள்ளிட்ட நால்வர் என 7 பேரை விடுதலை செய்ய ஜெயலலிதா ஆணையிட்டார். ஆனால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பில்லாத நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், அந்தக் கோரிக்கை குறித்து தமிழக அரசு இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க 2014 ஆம் ஆண்டில் என்னென்ன நியாயங்கள் இருந்தனவோ, அதே நியாயங்கள் இப்போதும் உள்ளன. ஆனால், சாதகமாக முடிவு எடுக்க தமிழக அரசை எந்த சக்தி தடுக்கிறது என்பது தெரியவில்லை.

பேரறிவாளனின் கடந்த கால செயல்பாடுகளையும், அவருக்கு இப்போதுள்ள கடமையையும் கருத்தில் கொண்டு அவர் உள்ளிட்ட 7 தமிழர்களையும் அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவுப்படி விடுதலை செய்ய வேண்டும். அதற்கான நடைமுறைகளை முடிக்க காலம் தேவைப்படும் என்றால் இடைக்கால ஏற்பாடாக பேரறிவாளனை உடனடியாக சிறை விடுப்பில் அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x