Last Updated : 11 Aug, 2021 08:55 PM

 

Published : 11 Aug 2021 08:55 PM
Last Updated : 11 Aug 2021 08:55 PM

புதுச்சேரியை மோடியும், அமித்ஷாவும் புறக்கணிக்கிறார்கள்; நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் ஒப்புதலுக்கான கோப்புகள் ஒரு மாதம் மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அதே நிலை முதல்வர் ரங்கசாமிக்கும் ஏற்பட்டுள்ளது.

இதில் மாற்றமில்லை. புதுச்சேரியை மோடியும், அமித்ஷாவும் புறக்கணிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஆக. 11) இரவு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 2-வது வாரம் தொடங்கி இன்று எதிர்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத காரணத்தால் அவையின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அவசரச அவசரமாக மத்திய அரசானது விவாதம் இல்லாமல் பல சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.

இஸ்ரேல் நிறுவனத்தின் என்எஸ்ஓ அமைப்பானது பெகாசஸ் என்ற மின்பொருளை பல நாடுகளுக்கு கொடுத்து, சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதிகாரபூர்வமாக அமெரிக்க பத்திரிக்கை இதனை வெளியிட்டது.

அதை ஆதாரமாக வைத்து நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பெகாசஸ் மென்பொருளை இந்திய நாட்டுக்கு யாரிடம் கொடுத்தார்கள்?. யார் அதை விலைக்கு வாங்கியது?. அதற்கும் இந்திய அரசுக்கும் சம்மந்தம் உண்டா?.

இது சம்மந்தமான விளக்கத்தைச் சொல்ல வேண்டுமென்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். ஆனால் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு மத்திய ராணுவத்துறை இணை அமைச்சர், ராணுவத்துறையானது என்எஸ்ஓ அமைப்போடு எந்தவித பணப்பரிவர்த்தனையும் வைத்துக்கொள்ளவில்லை.

நாங்கள் அந்த மென்பொருளை பெறவில்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால் உள்துறை, வெளியுறவுத்துறை, தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட மற்றத்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தினார்களா? அதற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது.என்பதற்கு நாடாளுமன்றத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்று பதில் அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் பிரதமர், உள்துறை அமைச்சர் இன்றுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்து தெளிவாக இந்திய அரசானது பிரதமர் உத்தரவின்பேரிலும், உள்துறை அமைச்சரின் மேற்பார்வையின் பேரிலும் தேசத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் எல்லாம் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது என்பது தெரிவாக தெரிகிறது.

இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கின்ற வேலை. தனிப்பட்ட ரகசியத்தை காப்பதை குழிதோண்டி புதைக்கின்ற வேலை. இது மிகப்பெரிய தேச குற்றமாகும். இதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்து வந்தது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய சிறந்த சீர்த்திருத்தம். சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும் என பிஹார் மாநில முதல்வர் நித்திஷ்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

இப்போது சில சமுதாயங்கள் எண்ணிக்கை இல்லாமலேயே நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அதிகப்படியான விழுக்காடுகள் உள்ள இடங்களை கல்வி, வேலைவாய்ப்பில் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசே முன்வந்து எடுத்து அதனடிப்படையில் இடஒதுக்கீடை கொடுப்பதன் மூலம் சமுக நீதியை நாட்டில் நிலை நாட்ட முடியும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல அவசர அவசரமாக கடல் மீன்வள மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மீனவ சமுதாயத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது.

மீனவர்களின் மடியில் கையைவைக்கின்ற இந்த மத்திய அரசானது தூக்கி எறியப்பட வேண்டும். நரேந்திர மோடி அரசு சர்வாதிகாரமாக மீனவர்களின் வாழ்வாரத்தை குறைக்கின்ற வகையில் இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதனை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் மீனவர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்.

கரோனா 3வது அலை பரவினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். 14 லட்சம் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும். கரோனா எதிர்ப்பு சக்தியை பெற முடியும். தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்தவேண்டும்.

தடுப்பூசி திருவிழா என்று, மிகப்பெரிய கூத்து இங்கு நடக்கிறது. மருத்துவத்துறை ஒவ்வொரு மையத்திலும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போட்டால் குறுகிய காலத்தில் இலக்கை அடைய முடியும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க அமைச்சரவையில் முடிவு எடுத்து, அரசு ஆணையாக வெளியிட்டோம். அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்தினார். மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் தரவில்லை. பிறகு நீதிமன்றம் சென்றோம். அதை பரிசீலனை செய்யவில்லை.

தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசானது, 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசிடம் கொண்டு சென்று பெற முயற்சி எடுக்க வேண்டும்.

பட்ஜெட்டுக்கான கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெறுவோம், 15வது நிதி கமிஷனில் இணைப்போம், கடனை ரத்து செய்வோம், பஞ்சாலைகளை திறப்போம், தேவையான நிதி பெறுவோம் என்று வாக்குறுதி தந்தனர். மக்களும் நம்பி வாக்குகளை தந்தனர்.

பாஜகவுடன் கூட்டணி செல்ல மாநில அந்தஸ்து தான்காரணம் என்று கூறிய ரங்கசாமி மவுனம் காக்கிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் ஒப்புதலுக்கான கோப்புகள் ஒரு மாதம் மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அதே நிலை முதல்வர் ரங்கசாமிக்கும் ஏற்பட்டுள்ளது. மாற்றமில்லை.

எங்கள் ஆட்சியை மத்திய பாஜக அரசு புறக்கணித்தது போலவே தற்போதைய ஆட்சியையும் புறக்கணிக்கிறது. மாநில அரசு அதிகாரத்தை பறிக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் ஒப்புதல் இரு நாட்களுக்குள் கிடைக்கும். தற்போது ஒரு மாதம் ஆகியும் கோப்பு இருக்கும் இடம் தெரியாத மோசமான நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

புதுச்சேரியை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புறக்கணிக்கிறார்கள். மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்க ஏற்கமாட்டோம் என்று தெளிவாக எங்கள் ஆட்சியில் தெரிவித்திருந்தோம். மத்திய அரசு தற்போது தனியார்மயமாக்கும் வேலையை ஆரம்பித்துள்ளனர். மின்துறை லாபமாக இயங்குகிறது.

25 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட கட்டமைப்பு உள்ளது. பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியானது, புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.’’இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x