

தொழிற்சாலை நகரில் பறவைகள், வன விலங்குகளுக்கு ஒரு காட்டை உருவாக்கி, ஓசூரின் இயற்கை எழிலை மீட்டெடுத்து வருகிறது டிவிஎஸ் நிறுவனம்.
ஓசூர் மாநகரம், 50 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்து, வனவிலங்குகள் நிறைந்த வனப்பகுதியாக இருந்தது. தற்போது, பெருகிவரும் தொழிற்சாலைகள் ஓசூரின் முக்கிய அடையாளமாக, நிமிர்ந்து நிற்கின்றன. அதிகரித்து வரும் மக்கள் தொகை, மரங்கள் வெட்டப்படுவது, பெருகி வரும் கட்டிடங்கள் ஆகியவற்றால், ஓசூரின் இயற்கை எழில் குறைந்து, வன விலங்குகளின் வாழ்விடம் சுருங்கிவிட்டது. யானைகளும் கூட,அவற்றின் வாழ்விடத்தை தொலைத்துவிட்ட அவலம் ஏற்பட்டுள்ளது.
இத்தகையச் சூழலில் ஓசூரின் கடந்த கால இயற்கை சூழலை மீட்டெடுக்கும் முயற்சியில் டிவிஎஸ்நிறுவனம் ஈடுபட்டு, அதில் மிகப்பெரும் வெற்றியை அடைந்துள்ளது.
இயற்கை மீது டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் கொண்டுள்ள ஆர்வத்தால், ஓசூரில் ஒரு புதிய வனப்பகுதி முளைத்துள்ளது. டிவிஎஸ் நிறுவன வளாகத்தின் உட்பகுதியில் 50 ஏக்கர் பரப்பில், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி உருவாக்கப்பட்டு, ஓசூருக்கு மீண்டும் இயற்கை அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இந்த வனப்பகுதியில் அருகி வரும் எறும்புதின்னி, சாம்பல் நிற தேவாங்கு உள்ளிட்ட விலங்குகளும் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
291 வனவிலங்குகள்
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் (சிவில்) வெங்கடேசன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, எங்கள் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் இயற்கை மீது கொண்ட ஈர்ப்பால், சுற்றுச்சூழலைப் பாதுக்கும் வகையில் வனப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவன வளாகத்தில் வனப்பகுதி அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், விலங்குகளுக்கு பயன்தரும் மரக்கன்றுகளை நடவு செய்தோம். ஆண்டுக்கு 2,500 மரக்கன்றுகள் நடவு செய்து வந்ததால், தற்போது 50 ஏக்கர் நிலமும்அடர்ந்த வனப்பகுதியாக மாறிஉள்ளது.
இங்குள்ள 18 பண்ணைக் குளங்கள் பசுமை படர்ந்து காணப்படுகின்றன. 442 வகையான தாவரங்கள் வளர்ந்து உள்ளன. மேலும், 140 வகை பறவைகள், 60 வகை பட்டாம்பூச்சிகள், 15 வகை பாம்புகள், 12 வகை பாலூட்டிகள் என 291 வகையான விலங்குகளின் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு வெளிநாட்டு மர வகைகளை தவிர்த்து, பறவைகள், பூச்சிகள் உணவுக்குத் தேவையான மரக்கன்றுகள், தாவரங்கள், செடி, கொடிகள் வளர்த்து வருகிறோம்.
இனப்பெருக்கம்
வண்ண நாரைகள், இந்திய சாம்பல் இருவாச்சி, காட்டுக்கோழி, கீரிப்பிள்ளை, எறும்புதின்னி, தேவாங்கு, பனை அணில், உடும்பு,நன்னீர் ஆமைகள், தட்டான் பூச்சிகள், பள்ளி அலகு வாத்து, வெள்ளைமார்பக நீர்க்கோழி உள்ளிட்டவற்றை ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இங்கு காணலாம்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தின்போது புலம்பெயர்ந்து வலசை வரும் பறவைகள் இவ்வளாகத்தில் இனப்பெருக்கம் செய்து தங்கள் வாழ்விடத்துக்குத் திரும்புகின்றன. இதற்காக 8 நீர்நிலைகளை உருவாக்கி உள்ளோம்.
பட்டாம்பூச்சி தோட்டம்
பறவைகளுக்கு இரையாகக் கூடிய மீன், நத்தைகள் உள்ளிட்டவை குட்டைகளில் விடப்படுகின்றன. இவை மட்டுமின்றி, பறவைகள் விரும்பி உண்ணக்கூடிய அத்தி, மா, பாதாம், நெல்லி,கொய்யா உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி தோட்டம், அதற்கான தாவரங்கள் நடப்பட்டுள்ளன.
செயற்கைக் கூடுகள்
பறவைகளின் இனப்பெருக்கத்துக்காக செயற்கைக் கூடுகள், கூடுகளுக்கான தளங்கள், கல்லால் ஆன உறைவிடங்கள், கூட்டுபெட்டிகள் உள்ளிட்ட இனப்பெருக்க மையங்கள் வடிவமைக்கப்பட்டு, காடுகளில் வைத்துள்ளோம்.
இதைத் தொடர்ந்து வன விலங்குகளின் வாழ்விடத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இப்பகுதியில் இயற்கையாக வளரும் தாவரங்களை நடுதல், குளங்களில் நீர்வளத்தை உறுதிப்படுத்துதல், நீர் இருப்புக்கு ஏற்ப புதிய குளங்களை உருவாக்குதல், குறிப்பிட்ட பறவை இனங்களை ஈர்த்தல், பாசிகளின் பெருக்கம் மற்றும் நீரில் ஆக்சிஜன் குறைவதைத் தடுக்கும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குளங்களைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ - மாணவியர், ஒவ்வொரு ஆண்டும் நேரில் வந்து பார்வையிடுகின்றனர். மாணவர்களுக்கு இயற்கையை மதிப்பது, பாதுகாப்பது, அதனுடன் இணைந்திருப்பது குறித்து நேரடியாக கற்றுச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்