Published : 13 Jun 2014 10:28 AM
Last Updated : 13 Jun 2014 10:28 AM

18 பேருக்கு முதுகுத்தண்டு வளைவு அறுவை சிகிச்சை: சென்னை அரசு மருத்துவமனை சாதனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 18 பேருக்கு முதுகுத் தண்டு பக்கவாட்டு வளைவு அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் ஆர்.விமலா முன்னிலையில் வியாழக்கிழமை நடந்தது. அதில் தண்டுவட அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் நல்லி யுவராஜ் கூறியதாவது:

முதுகுத் தண்டில் ஏற்படும் பக்கவாட்டு வளைவு நிலை ஸ்கோலியோசிஸ் எனப்படுகிறது. ஒருவரது பருவ முதிர்ச்சி காலகட்டத்துக்கு முன்னர் அவரது உடலில் ஏற்படும் கூடுதல் வளர்ச்சியால் முதுகுத் தண்டு வளைகிறது. இதன் காரணமாக குழந்தைகள் வளர வளர அவர்களால் இயல்பாக நடக்க முடியாது. நுரையீரல் சுருங்கி விரிவதில் சிரமம் ஏற்படும். அவர்களது அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கும். பின்னர் அவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகின்றனர். முதுகுத் தண்டின் கூடுதல் வளர்ச்சிக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. மரபு வழி காரணமாகக்கூட இருக்கலாம்.

2012-ல் முதல் அறுவை சிகிச்சை

இந்த குறைபாட்டை போக்க இங்கு 2007-ம் ஆண்டு தண்டுவட அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. 2012-ல் ஸ்கோலியோசிஸ் குறைபாடு உடையவர்களுக்கு முதன்முதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மிக சிக்கலானது. இந்த சிகிச்சையின்போது, தண்டுவடம் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்பு உண்டு. இதனால் அவர்கள் உடலசைவு அற்றவர்களாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை செய்தால். அவர்கள் உயரமாக வளர முடியாத நிலை ஏற்படும். அதனால் அவர்களுக்கு ஸ்கோலியோசிஸ் அறுவை சிகிச்சையுடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு அறுவை சிகிச்சையும் செய்யவேண்டியுள்ளது.

இதுவரை 18 பேருக்கு ஸ்கோலியோசிஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. நலமாக இருக்கிறார்கள். முதுகுத் தண்டு வளைவை 80 சதவீதம் குணப்படுத்த முடியும். 100 சதவீதம் குணப்படுத்த முயன்றால் தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகும்.

ரூ.7 லட்சம் செலவாகும் ஜி.ஹெச்.சில் இலவசம்

இந்த குறைபாடு உள்ளவர்களில் சராசரியாக 4-ல் 3 பேர் பெண்கள். இந்த அறுவை சிகிச்சையை 20 வயதுக்குள் செய்வது நல்லது. இதுபோன்ற குறைபாடு உடைய வர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை அணுக லாம். வாரத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போது 25 பேர் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்துகொள்ளலாம். இதே அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்துகொள்ள ரூ.7 லட்சம் வரை செலவாகும்.

இவ்வாறு நல்லி யுவராஜ் கூறினார்.

குணமடைந்த மாணவி பேட்டி

முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட வேலூர் மாவட்டம் அவலூர் கிராமத்தை சேர்ந்த பிரியங்கா கூறுகையில், ‘‘முதுகு வளைந்திருந்ததால் நிமிர முடியாமல், நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கு சென்று படித்து வந்தேன். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண் பெற்றேன், தற்போது பிளஸ் 2 படிக்கிறேன். ஸ்கோலியோசிஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, தற்போது நேராக நிமிர்ந்து நடக்க முடிகிறது. எல்லோரையும்போல படுத்து தூங்க முடிகிறது. என் உடல்நிலை காரணமாக பிளஸ்2-வுடன் படிப்பை நிறுத்திவிடலாம் என்று இருந்தேன். எல்லோரையும்போல இயல்பாக இருக்க முடியும் என்பதால், படிப்பை நிறுத்தப்போவ தில்லை. பிளஸ்2-வில் அதிக மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்கப்போகிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x