

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் பிரசித்தி பெற்றகந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆடிக் கிருத்திகை நாளில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக காவடி சுமந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது, கரோனா தொற்று பரவும் அச்சம் உள்ளதால் ஆடிமாத பரணி நாளான ஆக.1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஆடிக் கிருத்திகை நாளான ஆக. 2-ம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், வல்லக்கோட்டை, குமரகோட்டம், இளையனார் வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை நாளான ஆக.2-ம் தேதி ஒருநாள் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை எனவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிற முருகன் கோயில்களிலும் அன்றைய தினம் பக்தர்களின் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், ஆகம விதிகளின்படி 3 கால பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.