Last Updated : 15 Feb, 2016 10:34 AM

 

Published : 15 Feb 2016 10:34 AM
Last Updated : 15 Feb 2016 10:34 AM

கடந்த 3 ஆண்டுகளில் சிலிண்டர்கள் வெடித்ததில் 41 பேர் உயிரிழப்பு: விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த அளவு நிவாரணம்

கடந்த 3 ஆண்டுகளில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மிகக் குறைந்த அளவே அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. தமிழகத் தில் 1.50 கோடி பேர் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடி யாக தமிழகத்தில்தான் அதிகள வில் சிலிண்டர் வெடி விபத்துக்கள் நடக்கின்றன. இத்தகைய விபத்தில் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர், எவ்வளவு பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்வி களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் தரணிதரன் பொதுத்துறை எண் ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பி இருந்தார். அதற்கு எண்ணெய் நிறுவனங்கள் அளித்த பதில் குறித்து தரணிதரன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழப்பு அல்லது காயம் அடைந்தால் அவர்களுக்கு எண் ணெய் நிறுவனங்கள் எவ்வளவு இழப்பீடு வழங்குகிறது, எத்தனை பேருக்கு அவை வழங்கப்பட்டுள் ளன, காப்பீட்டுத் திட்டம் குறித்து நுகர்வோரிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த என்ன வகை யான பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பி இருந்தேன்

இதில் இந்தியன் ஆயில் நிறு வனம் அளித்துள்ள பதிலில் கடந்த 2012-13-ம் ஆண்டில் 26 சிலிண்டர் வெடி விபத்துகள் ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயம் அடைந்தாகவும், 2013-14-ம் ஆண்டில் 5 விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும், 2014-15-ம் ஆண்டில் 55 விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு மொத்தம் ரூ.72.38 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் வெடி விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், மிகக் குறைந்த தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இழப் பீட்டுத் தொகையை எவ்வாறு பெற வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். அதேபோல், எண்ணெய் நிறுவனங் களும் இந்த இழப்பீட்டை எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்து நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.

மேலும், நான் எழுப்பிய கேள்விகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மட்டுமே ஓரளவுக்கு பதில் அளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங் கள் சில கேள்விகளுக்கு மழுப்ப லாகவும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் மறுத்து விட்டன.

இவ்வாறு தரணிதரன் கூறினார்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கேட்டு எங்கள் நிறுவனத்தை உரிய முறையில் அணுகினால் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை முடிந்த அளவுக்கு விரைவாக வழங்கி வருகிறோம். சில நேரங்களில் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் காலதாம தம் ஏற்படுகிறது.

மேலும், இழப்பீட்டுத் தொகையை நுகர்வோர்கள் பெறுவது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x