

வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி அரசாணை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினை பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அதிமுக ஆட்சியின்போது கடந்தபிப்ரவரி 26-ம் தேதி சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்நிலையில், இந்த சட்டம் கடந்த பிப்.26-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ்நேற்று காலை தொடர்புகொண்டுநன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, நேற்று காலை பாமகதலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் வன்னியர் அமைப்பு நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறும்போது, ‘‘இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக முதல்வரைசந்தித்து நன்றி கூறினோம். இந்தஇடஒதுக்கீடு நடைமுறையால் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் என எந்த பிரிவினருக்கும் பாதிப்பு இல்லை. இந்தஇடஒதுக்கீடு காலம் தாழ்த்தியதுஎன்றாலும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது’’ என்றார்.
செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன்,‘‘ வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றிவிட்டதாக அதிமுக அறிவித்தது. ஆனால், இன்று திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசாணை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.