Published : 24 Jul 2021 06:55 PM
Last Updated : 24 Jul 2021 06:55 PM

அண்ணாசாலை தீ விபத்தில் கைக்குழந்தையை மீட்கப் பயன்பட்ட 54 மீட்டர் ஸ்கை லிஃப்ட் வாகனம்: தீயணைப்புத் துறை வீரரின் அனுபவப் பகிர்வு

சென்னை

அண்ணா சாலையில் நடந்த தீ விபத்தில் 6 மாதக் கைக்குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர் தனது வாழ்க்கையில் பல முறை இதுபோன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகளைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அண்ணா சாலையில், சாந்தி திரையரங்கம் அருகே உள்ள 5 மாடிக் கட்டிடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில அமைந்துள்ள கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் நிறுவனத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பற்றி எரிய காலையில் அலுவலகம் செல்வோர் இதைப் பார்த்து பதைபதைத்து தீயணைப்புத் துறைக்கு போன் செய்து தகவல் சொல்ல, உடனடியாக வாலாஜா சாலையில் உள்ள தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைக்கும் பணியில் இறங்கியது.

கட்டிடத்தின் மூன்றாவது மாடி என்பதாலும் கரும்புகையுடன் தீ திகு திகுவென எரிந்ததாலும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் தீயணைப்புத் துறையினருக்குப் புதிய சிக்கல் ஒன்று எழுந்தது. தீயை அணைக்கும் பணி ஒருபுறம் இருக்க, கட்டிடத்தின் உள்ளே 30க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகவும் வெளியேற வழியில்லாமல் தீயும், புகை மூட்டமும் உள்ளதாகவும் பிரச்சினை புதிய வடிவில் வந்தது.

சில மணி நேரம் அந்த நிலை தொடர்ந்தால் புகை மூட்டத்தில் சிக்கியும், தீயில் கருகியும் சிலர் உயிரிழக்கும் ஆபத்து உண்டு என்பதால் உள்ளே சிக்கியுள்ளவர்களை மாடி வழியாக மீட்க வேண்டும் எனத் தீயணைப்புத் துறையினர் உடனடியாக எழும்பூரில் ப்ராண்டோ ஸ்கை லிஃப்ட்ஸ் (Bronto sky lifts) எனப்படும் ஏணி வைத்த தீயணைப்புத் துறை வாகனத்தை வரவழைத்தனர். அது 54 மீட்டர் உயரம் செல்லும் தொட்டியுடன் கூடிய ஏணிப்படி கொண்ட தீயணைப்புத்துறை வாகனம் ஆகும்.

எழும்பூர் தீயணைப்புத்துறை, கே.கே.நகர், தேனாம்பேட்டை என சென்னையில் இவ்வகை வாகனங்கள் 3 உள்ளன. இதுதவிர கிண்டி ராஜ்பவன், தாம்பரம் தீயணைப்புத்துறை நிலையத்தில் பிரம்மாண்டமான 104 மீட்டர் உயரம் செல்லும் தொட்டியுடன் கூடிய ஏணி வைத்த வாகனங்கள் உள்ளன. இவை பின்லாந்து நாட்டிலிருந்து 2016ஆம் ஆண்டு சென்னை தீயணைப்புத்துறையின் பயன்பாட்டுக்கு வாங்கப்பட்டன.

இந்த பிரம்மாண்ட வாகனத்தை எழும்பூரிலிருந்து தீ விபத்து ஏற்பட்ட அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகே 10 நிமிடத்திற்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் அதன் பொறுப்பாளரான குமார் (எஸ்.ஓ.டி) என்கிற அதிகாரி. அதன் பின்னர் வாகனத்தை நிலைப்படுத்தும் பணிக்காக ஜாக்கிகளை இயக்கி நிறுத்திய பின்னர், வாகனத்தின் ஏணி அமைக்கப்பட்டுள்ள தொட்டிக்குள் ஏறி இயக்கி மேலே சென்றபோது உள்ளே சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் பணி முதலில் நடந்தது.

அப்போது அந்தக் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ள 30க்கும் மேற்பட்டோரில் ஒரு இளம்பெண்ணும் அவரது 6 மாதக் குழந்தையும் சிக்கியுள்ளதை குமார் பார்த்துள்ளார். சில நிமிடங்கள் தாமதித்தாலும் 6 மாதக் கைக்குழந்தை புகையால் மூச்சுத்திணறி இறக்கும் நிலை ஏற்படலாம் என்பதால் துரிதமாகச் செயல்பட்டு அங்கிருந்த சில பெண்களுடன் குழந்தையையும், தாயையும் ஏற்றி, குழந்தை புகை மூட்டத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, உடனடியாக மீட்டு கீழே இறக்கி பாதுகாப்பாக மற்ற தீயணைப்புத் துறையினரிடம் அளித்தார்.

இதில் சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் 6 மாதக் குழந்தை உயிர் பிழைத்திருக்குமா என்பது சந்தேகமே.

அந்த திக் திக் நிமிடங்கள் குறித்து குமாரிடம் பேசியபோது அவர் கூறியதாவது;

“அந்த நேரத்தில் வாகனத்தை எவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்ல முடியும் என்பதுதான் என் சிந்தனையில் இருந்தது. நீண்ட வாகனம் காலையில் அலுவலக நேரம் சைரனை ஒலிக்கவிட்டபடி எழும்பூரிலிருந்து காயிதே மில்லத் சாலை வழியாக ஸ்பென்சர் வந்து அண்ணா சாலையில் இடதுபுறம் திரும்பி நேராக சாந்தி திரையரங்கம் உள்ள பகுதிக்கு வந்து யூடர்ன் எடுத்து தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் வந்து வண்டியை நிறுத்தினேன். இத்தனையும் 10 நிமிடத்தில் முடிந்தது.

பின்னர் நானும் கூடுதலாக 2 தீயணைப்பு வீரர்களும் தொட்டிக்குள் ஏறி அதை இயக்கி மேலே சென்றோம். மேலே கட்டிடத்திற்குள் 30க்கும் மேற்பட்டோர் சிக்கி வெளியேற வழியில்லாமல் தவிப்பதைப் பார்த்தோம். தாயுடன் இருந்த 6 மாதக் கைக்குழந்தை தீக்குள் சிக்கி இருந்ததைப் பார்த்த அந்த நேரம் குழந்தை புகை மூட்டத்திலோ, தீயிலோ சிக்கிக்கொள்ளக் கூடாது என்கிற நினைப்புதான் பெரிதாக இருந்தது.

உடனடியாக என்னுடன் வந்த 2 வீரர்கள் கட்டிடத்துக்குள் தாவிக் குதித்தனர். அவர்கள் கட்டித்துக்குள் மாற்று வழியை யோசிக்க நான் தாயுடன் குழந்தையையும், சில பெண்களையும் மீட்டுக் கீழே கொண்டுவந்து இறக்கிவிட்டேன். குழந்தையை பத்திரமாக எங்கள் மேலதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக லிஃப்ட்டை இயக்கி மேலே சென்றேன்.

அங்கிருந்த ஆண்களில் 5 பேரை மீண்டும் தொட்டிக்குள் ஏற்றிக் கீழே இறக்க முயன்றேன். அப்போது ஆள் அதிகமாக இருந்ததால் தொட்டி சரியும் நிலை ஏற்பட்டது. உடனடியாக பக்கவாட்டில் இயக்கி பக்கத்தில் எரியாமல் இருந்த கட்டிட பால்கனியில் சிலரை இறக்கிவிட்டேன். அதற்குள் எங்களது ஆட்கள் கட்டிடத்திற்குள் இருந்த ஏசி பெட்டியை அகற்றிவிட்டு அதில் உள்ள துளை வழியாக மற்றவர்களை பத்திரமாக மீட்டு அடுத்த கட்டிடத்தின் வழியாக கீழே இறக்கிவிட்டனர்.

அதற்குள் திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினர் தீயையும் அணைத்து விட்டனர். ஸ்கை லிஃப்ட் வாகனம் இல்லை என்றால் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்தவர்கள் நிலை சிக்கலாகி இருக்கும். குறைந்தது சிலர் உயிரிழக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்”.

இவ்வாறு குமார் தன் அனுபவத்தைப் பகிர்ந்தார்.

கோவையில் காரில் பொருத்தப்பட்ட குண்டை அகற்றிய தருணம்

உங்களுக்கு இதுபோன்ற பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் அல்லவா என்று கேட்டபோது, ''ஆமாம். 1996ஆம் ஆண்டு பணியில் இணைந்தேன். அடுத்த மாதம் 25-வது ஆண்டை நிறைவு செய்கிறேன். எனது பணிக் காலத்தில் குஜராத் பூகம்பம், கோவை குண்டுவெடிப்பு அதிலும் கார் குண்டை அகற்றும் பணியில் இருந்தது. சென்னையில் கட்டிடம் புதைந்தபோது இதேபோல் தாயையும், மகளையும் இடிபாடுகளிலிருந்து மீட்டது என மனதுக்கு நிறைவு தரும் பல தருணங்கள் உண்டு'' என்று தெரிவித்தார்.

பல முறை தனது பணிக்காக மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டாலும், ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் அந்தத் தருணமே மகிழ்ச்சியான தருணம் என்று குமார் குறிப்பிட்டார்.

உண்மைதான். ஒரு குழந்தையை மீட்டபோதும் அதை ஒப்படைக்கும் போதும் அவர் முகத்தில் காணும் மகிழ்ச்சியை அந்தப் புகைப்படம் நன்றாக உணர்த்தியது. சேவைத்துறையில் காவல் பணி, தீயணைப்புத் துறையினர் பணி மிகச் சிக்கலானது. இதுபோன்ற தருணங்கள்தான் அவர்கள் செய்யும் வேலைக்குக் கிடைக்கும் மனநிறைவு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x