Last Updated : 22 Feb, 2016 07:40 AM

 

Published : 22 Feb 2016 07:40 AM
Last Updated : 22 Feb 2016 07:40 AM

மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் விஜயகாந்தை கிங் ஆக்க பரிசீலிப்போம்: திருமாவளவன் தகவல்

மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் விஜயகாந்தை ‘கிங்’ (முதல்வர் வேட்பாளர்) ஆக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று அக்கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தேமுதிக அரசியல் திருப்புமுனை மாநாடு, காஞ்சிபுரம் வேடலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள் யாரும் திமுகவை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவில்லை. ஆனால், பிரேமலதா விஜயகாந்த் மட்டும் திமுகவை விமர்சித் துப் பேசினார். தமிழகத்தை சுடுகாடு ஆக்கியது, நிர்வாகத்திறனற்ற ஆட்சியை நடத்தியது அதிமுக மட்டுமன்றி திமுகவும்தான் என்றார் அவர்.

கூவத்தை சுத்தப்படுத்தி சிங்காரச் சென்னை ஆக்குகிறேன் என்று திமுக ஆட்சியில் சொன்னார்கள். ஆனால், மழை வெள்ளம்தான் கூவத்தை சுத்தப்படுத்தியது என்றும் விமர்சித்தார். மேலும், நான் ‘கிங்’ ஆக வேண்டுமா அல்லது ‘கிங் மேக்கராக’ வேண்டுமா என தொண்டர்களிடம் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். அவர் ‘கிங்’ ஆக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறினர். இதனால், தேமுதிக தலைமையில் புதிய கூட்டணி அமையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜயகாந்தின் ‘கிங்’ பேச்சும் பிரேமலதா விஜயகாந்தின் திமுக விமர்சனமும் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

தேமுதிக மாநாட்டில் திமுக, அதிமுகவை பிரேமலதா விமர்சித்துள்ளார். இதன்மூலம், அந்த மாநாட்டில் ஒரு விஷயத்தை தேமுதிகவினர் தெளிவுபடுத்தியுள்ளனர். விஜயகாந்தை ‘கிங்’ ஆக்க வேண்டும் அதாவது, அவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக உள்ளது.

திமுகவும், அதிமுகவும் அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீதமிருப்பது இரண்டே வழிதான். ஒன்று பாஜக, மற்றொன்று மக்கள் நலக் கூட்டணி. அதிமுகவுடன் பாஜக காட்டும் நெருக்கம், விஜயகாந்துக்கு சங்க டத்தை ஏற்படுத்தும் என்ற சூழல்தான் இப்போது உள்ளது. எனவே, மக்கள் நலக் கூட்டணிக்கு அவர் வந்தால், அவரை முதல்வர் வேட்பாளர் ஆக்குவது பற்றி நாங்கள் 4 கட்சித் தலைவர்களும் பேசி முடிவெடுப்போம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

காங்கிரஸ் கருத்து

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப் பாளர் கோபண்ணா கூறும்போது, ‘‘தேமுதிக மாநாட்டில் திமுகவை யாரும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவில்லை. அதிமுகவை 95 சதவீதம் அளவுக்கு தாக்கிப் பேசினார்கள். ஆகவே, இப்போது எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x