Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம்: பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சேலத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார். உடன் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர்.

சேலம்

சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் இரு வழிச்சாலைகள் வருகின்றன. இவற்றில் விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் ரயில்வே மேம்பாலப் பணிகள் காலதாமதமாக நடைபெற்று வருகின்றன. இது மாநில நெடுஞ்சாலைத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணியாகும். குறிப்பாக, நிலம் கையகப்படுத்தும் பணி இதற்கு முக்கியமானது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ஆட்சியர்கள் முன்னுரிமை அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம சாலைகள் தரமாக உறுதியானதாக போட வேண்டும். தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிமீ., கிராம சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, உறுதியாக்கப்படும். தமிழகத்தில் தரக்கட்டுப்பாடு அதிகாரிகளைக் கொண்டு 25 இடங்களில் பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றில் தரமற்ற சாலைகள், பாலங்கள் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணகிரி- திண்டிவனம் சாலை மேம்பாட்டுப் பணிக்கு கடந்த ஆட்சியில் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. தற்போது, அப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம்- ஊத்தங்கரை இடையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சுங்கக் சாவடிகளில் சுங்கக் கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே, சுங்கக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.

ஒப்பந்த காலம் முடிவுற்ற சுங்கச் சாவடிகள் குறித்து மாநில அரசுக்கு தெரியாது. திண்டிவனம்-பரணூர் சுங்கச் சாவடி தொடர்பாக எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் அவை குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக ஒப்பந்ததாரர்களை அழைத்துப் பேசியிருக்கிறோம். பொறியாளர்களைக் கொண்டு குழு அமைத்துள்ளோம். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x