Published : 05 Jul 2021 04:43 PM
Last Updated : 05 Jul 2021 04:43 PM

மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உயிர் காக்கும் சாதனம்: கட்டாயம் பொருத்த புதிய விதி அமல் 

சென்னை

மின் பழுது மற்றும் மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளைக் குறைக்கவும், அத்தகைய மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் ஆர்.சி.டி. ((RCD) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தைக் கட்டாயம் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்த அரசு புதிய விதியைக் கொண்டுவந்துள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையச் செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாட்டில், மின் பழுது மற்றும் மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளைக் குறைக்கவும், அத்தகைய மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் ஆர்.சி.டி. ((RCD) என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்த வழிவகை செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் பகிர்மான விதித் தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

1. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், தெருவிளக்குகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற உபயோகத்திற்கான ஒருமுனை (Single phase), மும்முனை மின் (three phase) இணைப்புகளிலும், தற்காலிக மின் இணைப்புகளிலும் ஆர்.சி.டி. (RCD) என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தைப் பொருத்த வேண்டும். மின் அதிர்ச்சியைத் தவிர்த்து மனித உயிர்களைக் காக்கும் பொருட்டு அதனுடைய மின் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. அதேபோல 10 கிலோ வாட்டிற்கு மேல் மின் சாதனங்களைப் பொருத்தியிருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக் கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற உபயோகத்திற்கான மின் இணைப்புகளில் மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்தைத் தடுக்கும் பொருட்டும், உடைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும் அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட ஆர்.சி.டி. (RCD) சாதனத்தைப் பொருத்த வேண்டும்.

3. தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதைத் தடுக்கும் வகையில், மின் பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சுற்றிலும் தனித்தனியாக ஆர்.சி.டி. சாதனத்தைப் பொருத்த வேண்டும். அத்தகைய அமைப்பினால், அந்தந்தக் கட்டிடப் பகுதியில் உள்ள மனிதர்கள், அந்தந்தப் பகுதியில் உண்டாகும் மின்பழுதினால் ஏற்படும் மின் அதிர்ச்சியிலிருந்து காக்கப்படுவார்கள்.

4. புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், மேற்கண்ட உயிர் காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டிடத்தில் நிறுவி அதை விண்ணப்பப் படிவத்தில் உறுதியளிக்க வேண்டும். ஆர்.சி.டி. (RCD) என்கிற சாதனத்தைப் பொருத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல், மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது.

5. மின் விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களை அறவே தடுக்க வேண்டுமென்பது இவ்வாணையத்தின் நோக்கமாகும். இந்த சட்டபூர்வமான வழிமுறையை அனைத்து பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்".

இவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x