Published : 20 Feb 2016 10:35 AM
Last Updated : 20 Feb 2016 10:35 AM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரிக்கு 7 ஆயிரம் பறவைகள் வருகை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரிக்கு 7 ஆயிரத்து 256 பறவைகள் வந்துள்ளன. இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஓட்டேரி நீர்ப் பறவைகள் ஏரி பராமரிக்கப்பட்டு வருகிறது. அது 16 ஏக்கர் பரப்பரளவும், 635 மீட்டர் நீளம் கொண்ட கரையையும் கொண்டுள்ளது. இதன் நீர் கொள்ளளவு 8 கோடியே 50 லட்சம் லிட்டர். இந்த ஏரி 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த மழையின்போது முழு கொள்ளளவை எட்டியது. அதனால் இந்த ஏரிக்கு ஏராளமான பறவைகள் வந்து, கூடு கட்டி, குஞ்சு பொரித்துள்ளன.

இந்த ஏரியில் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி, பூங்கா உயிரியலாளர்கள் மற்றும் விலங்கு காப்பாளர்கள் மூலம் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. இதில், 31 இனங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 256 பறவைகள் இருப் பது தெரியவந்துள்ளது. இவற் றில் 11 பறவையினங்கள் இங்கேயே தங்கி, கூடு கட்டி இனப் பெருக்கம் செய்வதும் மற்றவை இரைக்காக வந்து செல்வதும் தெரியவந்துள்ளது.

இங்கு, 3 ஆயிரத்து 259 இந்திய நீர்க்காகங்களும், 1756 சிறிய நீர்க்காகங்களும் உள்ளன. இந்திய நீர்க்காகங்கள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 134 மட்டுமே உள்ளன. மாறாக சிறிய நீர்க் காகங்கள் வேடந்தாங்கலில் 3 ஆயிரத்து 672 உள்ளன. வேடந்தாங்கலில் காணப்படும் 66 பறவையினங்களில் 31 பறவையினங்கள் ஓட்டேரியில் காணப்படுவதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் தவறாது இந்த ஏரியை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x