Published : 25 Dec 2015 11:47 AM
Last Updated : 25 Dec 2015 11:47 AM

சூரிய ஒளி மின்சாரம்: கொள்முதல் விலை சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

மழையை காரணம் காட்டி மிகப்பெரிய சலுகைகளை பெற சூரிய ஒளி மின்நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இச்சலுகைகளை வழங்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை அரசு ஈடுசெய்யுமா? என்பது மில்லியன் டாலர் வினாவாக உருவெடுத்துள்ள நிலையில், மழையை காரணம் காட்டி மிகப்பெரிய சலுகைகளை பெற சூரிய ஒளி மின்நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அவை கோரும் சலுகையை அளித்தால் கிடைக்கும் லாபத்தை கருதி ஆளுங்கட்சியும் அதற்கு சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரக் கொள்கையை கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1000 மெகாவாட் வீதம் 3 ஆண்டுகளில் 3000 மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின்சாரக் கட்டமைப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தும் என்று அறிவித்தார். 2015 ஆம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை ஒரு மெகாவாட் அளவுக்கு கூட சூரிய ஒளி மின்சாரக் கட்டமைப்புகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்படவில்லை.

சூரிய ஒளி மின்சாரம் அரசால் தயாரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த ஜெயலலிதா, அதை தலைகீழாக மாற்றிக் கொண்டு தனியார் நிறுவனங்கள் சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிக்கும்; அதை தமிழ்நாடு மின்சார வாரியம் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும் என்று விளக்கம் அளித்தார். அதன்படி, சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்க விண்ணப்பித்த நிறுவனங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் தமக்கு வேண்டிய அதானி குழுமம் (648 மெகாவாட்) உள்ளிட்ட நிறுவனங்களுடன் மொத்தம் 2000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க பல்வேறு காலகட்டங்களில் அ.தி.மு.க. அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

சூரியஒளி மின்சாரத்தை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்வதற்கான விலையை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் தீர்மானிக்கும். அதன்படி தமிழகத்தில் 12.09.2015க்குள் உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில் கொள்முதல் செய்ய முடியும். அதற்குப் பிறகு உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனங்களிடம் ரூ.5.87 என்ற விலையில் தான் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், சூரிய ஒளி மின்நிறுவனங்களுக்கு ஆதரவாக, 31.03.2016 வரை உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனங்களிடமிருந்தும் ரூ.7.01 என்ற விலையிலேயே மின்சாரத்தைக் கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

அதன்பிறகு தான் அதானி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், அதானி குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்னுற்பத்தியை தொடங்க முடியாது. அவ்வாறு தொடங்க முடியாவிட்டால் 2016 ஆம் ஆண்டிற்கு கொள்முதல் விலை என்ன நிர்ணயிக்கப்படுகிறதோ, அந்த விலைக்குத் தான் அந்த நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய முடியும். 2016 ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரத்தின் கொள்முதல் விலை ரூ.5-க்குள் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சூரிய ஒளி மின்சார நிறுவனங்கள் எப்போது உற்பத்தியைத் தொடங்கினாலும், அவற்றிடம் இருந்து ரூ.7.01 என்ற விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்து கொள்வதாக தமிழக அரசு எழுதப்படாத ஒப்பந்தத்தை செய்து கொண்டிருப்பதாகவும், அதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகும் இதே விலை நீட்டிக்கும் என்றும் முன்பே குற்றஞ்சாற்றியிருந்தேன். அதைப்போலவே, வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த நிறுவனங்களில் ஒன்று கூட உற்பத்தியைத் தொடங்க வாய்ப்பு இல்லை. மார்ச் மாதத்திற்கு பிறகு உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு புதிய விலை தான் வழங்க முடியும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தடுக்க தமிழகத்தில் பெய்த மழையால் தாங்கள் ஏற்படுத்திய கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து விட்டதாகவும், அதனால் உற்பத்தி தொடங்குவதற்கான கெடுவை மார்ச் மாதத்திற்கு பிறகு நீட்டிக்க வேண்டும் என்றும் அரசை சூரியஒளி நிறுவனங்கள் கோரியுள்ளன.

தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்திட்டங்கள் பெரும்பாலும் இராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் தான் செயல்படுத்தப்படுகின்றன. அந்த மாவட்டங்களில் மழை&வெள்ளத்தால் எந்த பாதிப்பும் இல்லை. அதிக கொள்முதல் விலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இல்லாத பாதிப்பைக் காரணம் காட்டி இப்படி ஒரு கோரிக்கையை சூரியஒளி நிறுவனங்கள் முன்வைத்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் ஒரு யூனிட் சூரியஒளி மின்சாரம் ரூ.4.50 என்ற விலைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதை விடுத்து பழைய விலைக்கே சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்தால் மெகாவாட்டுக்கு ரூ.11.25 கோடி இழப்பு ஏற்படும். வரும் மார்ச் மாதத்திற்குள் மொத்தம் 10,000 மெகாவாட் அளவுக்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக அரசு முடிவு செய்திருப்பதால் ரூ.1 லட்சத்து 12,500 கோடி இழப்பு ஏற்படும்.

ஆனால், இதையெல்லாம் தெரிந்து கொண்டே விலைச்சலுகையை நீட்டித்து வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அவ்வாறு செய்தால் அது மிகப்பெரிய ஊழலாக அமையும். எனவே, சூரிய ஒளி மின்சாரத்திற்கான விலைச்சலுகையை தமிழக அரசு நீட்டிக்கக்கூடாது. அவ்வாறு நீட்டித்தால், அதில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை கோரி பா.ம.க. வழக்குத் தொடரும்"

இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x