Published : 09 Jun 2021 14:02 pm

Updated : 09 Jun 2021 14:02 pm

 

Published : 09 Jun 2021 02:02 PM
Last Updated : 09 Jun 2021 02:02 PM

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் என்ன செய்கிறார்?- நாராயணசாமி கேள்வி

what-is-the-puducherry-chief-minister-doing-in-the-matter-of-cancellation-of-neet-examination

புதுச்சேரி

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை எனப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,


‘‘புதுச்சேரியில் கரோனா தாக்கம் குறைந்திருக்கும் காரணத்தினால் மதுக்கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

இதன் தாக்கம் புதுச்சேரியில் உள்ளது. மாநில எல்லையில் உள்ள மதுக்கடைகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். இதனால் கரோனா 2-வது அலை மறுபடியும் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அரசு புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் விஷப்பரீட்சையை இந்த அரசு செய்யக் கூடாது. மதுக்கடைகளைத் திறந்ததன் மூலமாக கரோனா அதிகமாக வந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் முதல்வர் ரங்கசாமி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். வாழ்வாதாரம் இல்லை. வேலையில்லை. இந்த நேரத்தில் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய நிவாரணத்தை அரசால் கொடுக்க முடியவில்லை. இதைத் தர நிதியில்லை என்கிறார்கள். ஏற்கெனவே நிர்வாகத்தைப் பார்த்த முதல்வர், நிதியில்லாமல் எப்படி நிவாரணத்தை அறிவித்தார்?

புதுச்சேரியில் அரசியல் துரோகிகள் நிறைய பேர் வெற்றி பெற்று வந்துள்ளார்கள். இதில் சில அரசியல் கோமாளிகளும் வந்துள்ளார்கள். இவர்களை எல்லாம் எங்களது ஆட்சியில் கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் அவர்கள், மக்கள் கள்ளச்சாராயத்தைக் குடித்து இறக்கிறார்கள் என்று ஆளுநரைச் சந்தித்து மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். அவர்களுக்கு கரோனாவால் ஒரு மாதத்தில் 750 பேர் இறந்தது கண்ணுக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் கோமாளிகளை கட்டுக்குள் வைத்திருக்க அரசால் முடியவில்லை.

பிரதமர் மோடி எடுத்த முடிவின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால், நீட் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது எந்த வகையில் நியாயம். தமிழக முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. எனவே, மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமருக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன்.

தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டிவிட்டது. டீசல் விலை ரூ.92-க்கு வந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலையை ரூ.1 உயர்த்தினால் தெருவில் இறங்கி போராடிய பாஜக, இன்று வாயை மூடிக் கொண்டிருக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 11-ம் தேதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி புதுச்சேரியில் நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம்.

தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் முதல்வரைத் தவிர அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை. அதிகாரச் சண்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவில்லை. எப்போதுதான் பதவியேற்றுக் கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களுக்குப் பயனளிக்காத அளவில் இந்த ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்.ஆர். காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்தியில் இருந்து பல்லாயிரணக்கான கோடி ரூபாயைக் கொண்டுவந்து மாநிலத்தில் வளர்ச்சியைக் காண்போம் என்று கூறினார்கள். இப்போது அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகங்கள் எல்லாம் விரைவில் அம்பலமாகும். மக்களைக் காப்பாற்ற இந்த அரசு தவறிவிட்டது. டிசம்பருக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட்டுக் காப்பாற்ற வேண்டும்.’’

இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

தவறவிடாதீர்!நீட்ரங்கசாமிமருத்து நுழைவு தேர்வுமுதல்வர் நாரயண சாமிகாங்கிரஸ்என் ஆர் காங்கிரஸ்NeetPuducherryNeet exam

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x