Published : 11 Dec 2015 11:02 AM
Last Updated : 11 Dec 2015 11:02 AM

சென்னையில் ஓடும் ஆறுகளை உடனடியாக தூர்வார வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னையை சிங்காரச் சென்னை ஆக்குகிறேன் என்று கூறி, மாறிமாறி ஆட்சி செய்த திமுக, அதிமுகவினர் அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை முழுமையாக தூர்வாரவில்லை. ஆட்சியாளர்கள் செய்யாததை தற்போது பெய்த மழை செய்துள்ளது. சென்னையில் ஓடும் ஒவ்வொரு ஆற்றிலும் தற்போது 5 முதல் 10 அடி வரை சேறு தேங்கியுள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தூர்வார வேண்டும்.

மேலும், ஆற்றின் கரைகளை வலுப்படுத்தி சுவர்களை எழுப்ப வேண்டும். ஆற்றுக்குள் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் அந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே எதிர்கால பாதிப்புகளில் இருந்து சென்னையை காப்பாற்ற முடியும்.

மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. நிவாரணப் பொருட்களின் விநியோகமும் சீராக இல்லை. பல இடங்களுக்கு நிவாரண உதவிகள் இன்னும் போய் ச் சேரவில்லை. கப்பல்களில் வந்த நிவாரணப் பொருட்களை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களிடையே போதிய தகவல் தொடர்பின்மைதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே, இவற்றையெல்லாம் உடனடியாக அரசு சீர்செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x