Published : 04 Jun 2021 03:43 PM
Last Updated : 04 Jun 2021 03:43 PM

முதல்வர் ஸ்டாலின் பண்பைக்கண்டு நெகிழ்ந்து போனேன்: சீமான் பேட்டி

தனது தந்தை மறைந்தபோது முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல் போனிலும் அழைத்து ஆறுதல் தெரிவித்தது தன்னை நெகிழ வைத்தது என சீமான் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாரதிராஜா ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது கரோனா நிவாரண நிதியை சீமான் வழங்கினார். பின்னர் ஏழு பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனுவையும் அளித்தார்.

தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு குறித்த தமது நிலைப்பாட்டையும், கோரிக்கையையும் வைத்துள்ளார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:

தமிழ்நாடு, தமிழகம், ஒன்றிய அரசு, மத்திய அரசு போன்ற விவாதங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

அதை தொடங்கியவனே நான் தானே, இது தமிழ்நாடு, தமிழர் நாடு. இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததல்ல, ஐயா பெரியார் சொன்னது போல அது இருந்ததில்லை, இனி எப்போதும் இருக்கப்போவதும் இல்லை. அது உருவாக்கப்பட்டது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த நாடு நாடாக மாறும் முன்னரே நிலைத்து வாழ்ந்த பூர்வக்குடிமக்கள். இது எங்கள் நாடு தமிழர் நாடு. இந்தியாவே பாரத நாடு பைந்தமிழர் நாடு புரட்சியாளர் அம்பேத்கர் தெளிவாக வரையறுத்துள்ளார். இந்த நாடுமுழுமைக்கும் பரவி இருந்தவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டிருந்த நாகர்கள் என்கிறார்.

அதனால்தான் நாகர்கோயில், நாகலாந்து, நாகப்பட்டினம் இதெல்லாம் வரக்காரணம் நாங்கள் நாகர்கள். இன்று நாடற்றவர்கள் இங்கு வந்து என் நாடு என்று சொந்தங்கொண்டாடிக்கொண்டு பிரிக்கிறான் என்பதெல்லாம் கிடையாது. நான் தேங்காயை உடைத்து சில்லெடுத்து கடிக்கிறவன் கிடையாது. முழுத்தேங்காயும் என்னுடையது என்று சொல்பவன் நான்.

இந்தியா என்பதே மாநிலங்களின் ஒன்றியம் என்றுத்தானே அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போல இது மாநிலங்களின் ஒன்றியம்.

முதல்வரின் செயல்பாடு ஒரு மாதத்தில் எப்படி உள்ளது?

நன்றாக உள்ளது, மருத்துவத்துறையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் போன்றோர் இயங்குவது சிறப்பாக உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்கள் சொல்கிறார்களே?

கேள்வி எதை வேண்டுமானாலும் எழுப்பலாம், தேர்வு எழுதும்போது தொற்று ஏற்பட்டால் உயிரிழந்தால் யார் பொறுப்பேற்பது, நாளை உயிர் போனால் இவர்கள் பொறுப்பேற்பார்களா? ஆகையால் உரிய முடிவு எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.

முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

சந்திப்பை பெருமைக்குறியதாக பார்க்கிறேன், என் தந்தை இறந்தபோது அவர் ஒரு இரங்கல் அறிக்கை விட்டார். அத்தோடு அவர் விட்டிருக்கலாம். அந்த செய்தியே போதுமானது என்று நான் நினைத்தேன். அதுவே எனக்கு ஆறுதலாக இருந்தது. அதன் பின்னரும் தொலைபேசியில் என்னை அழைத்து பேசினார். நான் நிறைய நெகிழ்ந்துவிட்டேன். அதன் பிறகு அவரை சந்திக்கணும் என நினைத்திருந்தேன்.

அப்பா தான் (பாரதிராஜா) வா போய் சந்திக்கலாம் என்று அழைத்து வந்தார். அரசியலில் ஆயிரம் கருத்துகள் இருக்கலாம், முரண்கள் இருக்கலாம் ஆனால் அனைத்தையும் மீறியது இதுபோன்ற சந்திப்புகள்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x