Published : 28 Dec 2015 08:29 AM
Last Updated : 28 Dec 2015 08:29 AM

வெள்ள பாதிப்புகளை தடுக்க ‘மக்கள் பட்டயம்’ செயல் திட்டம்: மக்கள் சிவில் உரிமைக் கழகம் அறிவிப்பு

சென்னையில் மழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்காக நீண்டகால செயல் திட்டங்களை உள்ளடக்கிய ‘மக்கள் பட்டயம்’ உருவாக்கப்பட்டு அரசிடம் வழங்கப்படும் என மக்கள் சிவில் உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.

வெள்ள பாதிப்பின்போது மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்கள், உதவி செய்தவர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பல்வேறு விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னையைப் பொறுத்தவரை வெள்ளம் வடிந்தோடும் வகையில்தான் நிலப்பரப்பு அமைந்துள்ளது. ஆனால், தண்ணீர் செல்லும் பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலங்களை அழித்ததும் வெள்ளத்துக்கு முக்கிய காரணம். இவற்றை பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும். இதற்காக, மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் ஒன்று திரட்டி ‘மக்கள் தளம்’ என்ற பொது மேடையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், சென்னையில் எதிர்காலத்தில் மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்காக நீண்டகால செயல் திட்டங்களை உள்ளடக்கிய ‘மக்கள் பட்டயம்’ உருவாக்கி, அரசிடம் வழங்கப்படும்.

இவ்வாறு டாக்டர் சுரேஷ் கூறினார்.

மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் பேராசிரியர் சரஸ்வதி, நிர்வாகிகள் சாரு கோவிந்தன், பேராசிரியர் கிளாட்ஸ்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x