Last Updated : 01 Jun, 2021 05:37 PM

 

Published : 01 Jun 2021 05:37 PM
Last Updated : 01 Jun 2021 05:37 PM

கரோனா சூழலில் அமைச்சர் பதவி கோரி புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் குவிந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள்

கரோனா சூழலில் அமைச்சர் பதவி கோரி மனு தர பாஜக அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி எம்எல்ஏ ஆதரவாளர்கள் குவிந்தனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்றாலும் முதல்வர் ரங்கசாமி மட்டுமே பொறுப்பு ஏற்றுள்ளார். அமைச்சர் பதவிகளைப் பெறுவதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. கரோனா காலத்தில் மக்கள் கடும் துன்பத்தைச் சந்திக்கும் வேளையிலும் கடுமையான பதவிப் போட்டியால் அமைச்சரவை அமைக்க முடியாத சூழலே நிலவுகிறது.

இந்நிலையில் பாஜகவிலுள்ள எம்எல்ஏக்கள் பலரும் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க ஒவ்வொருவரும் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் ஊசுடு தனித் தொகுதியில் வென்ற எம்எல்ஏ சாய் சரவணகுமாருக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் பாஜக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அவர்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று மனு தந்தனர்.

எம்எல்ஏ சாய் சரவணகுமாரின் ஆதரவாளர்கள் கூறுகையில், "ஊசுடு தொகுதி தனித் தொகுதி. தமிழகம், புதுச்சேரியில் தனித் தொகுதியில் வென்ற ஒரே பாஜக வேட்பாளர் இவர்தான். மேலிடப் பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா எங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, எங்கள் தொகுதியை அமைச்சர் தொகுதியாக்க வேண்டும். இதுபற்றி மனு தந்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

கரோனா அதிக அளவில் புதுச்சேரியில் உள்ள சூழலில் முகக்கவசம் சரியாக அணியாமல் சமுக இடைவெளியின்றிப் பலரும் பாஜக அலுவலகத்தில் குவிந்திருந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை.

கூட்டணிக் கட்சிகளுக்குள் அமைச்சர் பதவிக்குள் மோதல் இருக்கும் சூழலில், பாஜகவினுள் எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவியைப் பெறத் தனியாகக் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது வெளிப்படையாகியுள்ளது.

இதுபற்றி தொகுதி எம்எல்ஏ வெளியிட்ட வாட்ஸ் அப் தகவலில், "கரோனா அதிக அளவாக இருப்பதால் யாரும் இதில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்திருந்தேன். பதவியைத் தேடி அலையக்கூடாது. பதவி நம்மைத் தேடி வரவேண்டும் என்பதே எனது கருத்து" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x