Published : 01 Jun 2021 05:01 PM
Last Updated : 01 Jun 2021 05:01 PM

3 வாரத்திற்கு முன்பிருந்த நெருக்கடியான சூழல் தற்போது இல்லை: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்

மதுரை

‘‘தமிழகம் மட்டுமில்லாது மதுரை மாவட்டத்திலும் 3 வாரத்திற்கு முன்பிருந்த நெருக்கடியான சூழல் தற்போது இலலை’’ என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதன்பிறகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் மட்டுமில்லாது மதுரையில் மூன்று வாரத்திற்கு முன்னர் இருந்த நெருக்கடியான சூழல் தற்போது இல்லை. மிகவும் சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது.

மதுரையில் ஒரு நேரத்தில் படுக்கை வசதிகள் இல்லை, ஐசியு படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவகையிலும் பிரச்சினை இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நான் மட்டுமில்லாது அமைச்சர் பி.மூர்த்தி, கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அதிகாரிகள் விஞ்ஞான முறையில் கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுத்ததால் குறுகிய காலத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவில்லாமல் கொண்டு வர இயலாத கருப்பு பூஞ்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி மட்டும் தேவையான அளவு இல்லையே தவிர மற்ற அனைத்து வகையிலும் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தாண்டி கிராமங்கள் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ளிட்ட பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு ஆங்காங்கு நடைபெற்ற செயல்பாடுகளால் மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைத்திட வழி வகை செய்யப்பட்டது.

கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், 3500க்கும் மேற்பட்ட கூடுதல் முன்களப் பணியாளர்களை நியமனம் செய்து வீடுகள் தோறும் தேடிச் சென்று பரிசோதனைகள் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தோப்பூரில் மட்டும் 400 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கினோம். இந்த முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் இன்னும் சீக்கிரமாகவே இரண்டாவது அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பொதுவாகவே இயல்பாகவே ஊரடங்கு காலத்தில் விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் ஏற்படும். ஆனாலும், மதுரையில் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையும், விலை ஏற்றமும் இல்லாதவகையில் நடவடிக்கை எடுத்தோம்.

சில விஷயங்கள் தவறு நடந்த பிறகு தான் திருத்திட முடியும். அந்த வகையில் தான் சமீபத்தில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற்றவருக்கு 64.000 ரூபாய் பணம் திரும்பப் பெற்றுத் தரப்பட்டுள்ள்ளது. இந்தத் தவறுகள் மறுபடியும் நடைபெறாத வகையில் அமைச்சர் தலைமையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆலோசனைக் கூட்டமும் நடத்தியுள்ளோம். கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளோம்.

தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மதுரை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உலக அளவில் தடுப்பூசி குறைபாடு இருக்கிறது.

எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் 8 கோடி தடுப்பு ஊசிகள் கூடுதலாக வைத்து உள்ளார்கள். அதனை தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் நானும் பங்கெடுத்தேன்.

அதேவேளையில், உலகத்தியிலேயே மருத்துவ துறையில் அதிக உற்பத்தி திறன் வைத்துள்ள இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை ஊக்குவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

தடுப்பூசியைப் பொறுத்தவரையில் தொழில் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசே தடுப்பூசி உற்பத்தியில் இறங்கலாம் என்ற ஏற்பாடும் இருக்கிறது.

தொலைநோக்குப் பார்வையோடு இதனை அணுகி தொழிலதிபர்கள் சிஎஸ்ஆர் மூலம் 5000 முதல் 8000 லிட்டர் ஆக்ஜிசன் உற்பத்தியை இங்கு இருந்தே செய்திடும் திட்டமும் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x