Last Updated : 21 Dec, 2015 03:08 PM

 

Published : 21 Dec 2015 03:08 PM
Last Updated : 21 Dec 2015 03:08 PM

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.280 மதிப்பில் பொங்கல் பரிசு

புதுச்சேரியில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ஜனவரி 5-ம் தேதி முதல் ரூ. 280 மதிப்புடைய பொங்கல் பரிசு பொருட்கள் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் அறையில் 2016-ம் ஆண்டுக்கான காலண்டர், டைரியை வெளியிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 5-ம் தேதி முதல் புதுச்சேரியிலுள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 280 மதிப்புள்ள பொங்கல் பரிசு வழங்கப்படும்.

இதில் பச்சைஅரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, தலா அரை கிலோ துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெல்லம், பச்சை பயறு ஆகியவை தரப்படும். இதற்கு ரூ. 9.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச பரிசை அந்தந்த ரேஷன் கடையில் பெறலாம்.

புதுச்சேரி காரைக்காலில் கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 4 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 2 லட்சத்து 81 ஆயிரத்து 154 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு எண் தராமல் 15,425 ரேஷன் அட்டைதாரர்கள் புதுச்சேரியிலும், 12,394 ரேஷன்அட்டைதாரர்கள் காரைக்காலிலும் உள்ளனர்.

ரேஷன் அட்டைஎண், வங்கி கணக்கு எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பொதுமக்கள் தகவல் சேவை மையத்தை நாடி அறிந்து கொள்ளலாம்.

ரேஷன் எண், வங்கி கணக்கு எண்ணை இணைக்க குடிமை பொருள் அலுவலகத்துக்கு செல்லவேண்டியதி்ல்லை. புதுச்சேரி, வில்லியனூர், பாகூர், உழவர்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலேயே ரேஷன் எண், வங்கி கணக்கு எண்ணை இணைத்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தொகையை பொங்கல் வரை பெறலாம்.

இலவச மிக்சி, கிரைண்டர் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தரப்படும். இதுவரை காலாப்பட்டு, பாகூர், ஏம்பலம், மண்ணாடிப்பட்டு, திருபுவனை தொகுதிகளில் முழுவதுமாக தரப்பட்டுள்ளது. அடுத்து தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திராநகர், ஊசுடு, வில்லியனூர், லாஸ்பேட்டை தொகுதி மக்களுக்கு அந்ததந்த தொகுதிகளிலேயே வரும் 30ம் தேதி வரை தரப்படும்.

ஜனவரி இறுதிக்குள் அனைத்து தொகுதிகளிலும் தரப்பட்டு விடும். அடுத்து காரைக்காலில் ஒரே நாளில் ஐந்து தொகுதிகளிலும் இலவச பொருட்கள் தரப்படும்.

பயிர் சேதம் விவரத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பயிர்சேதமடைந்தோர், கால்நடை இறந்தோர் ஆகியோருக்கான நிவாரணத்தொகையும் அவரவர் வங்கி கணக்கில் தரப்படும். மத்திய அரசு இதுவரை ரூ. 50 கோடி முதல்கட்ட நிவாரணமாக தந்துள்ளது. விரைவில் நிவாரணத்தொகை தரும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x