Published : 22 May 2021 02:00 PM
Last Updated : 22 May 2021 02:00 PM

ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருப்பதைத் தவிர்க்க ஜீரோ டிலே வார்டு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடக்கம்

சென்னை

ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனை வாசலில் காத்திருக்காமல் இருக்க, மருத்துவ சிகிச்சைக்கு முன் அவர்களைப் பார்த்துக்கொள்ள கூடுதலாக 136 படுக்கை வசதிகள் கொண்ட பூஜ்ஜிய தாமதம் (zero delay) வார்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குப் படையெடுக்கத் தொடங்கினர். இதில் பலர் மூச்சுத்திணறல் காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இவ்வாறு ஆம்புலன்ஸில் காத்திருந்த 4 பேருக்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

இதையடுத்து இதுபோன்று மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க அரசு முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் இவ்வாறு வருபவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முன் ஆம்புலன்ஸில் காத்திருப்பதைத் தவிர்க்க பூஜ்ஜிய தாமத வார்டு (zero delay ward) 133 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 136 படுக்கை வசதிகள் கொண்ட பூஜ்ஜிய தாமத வார்டு (Zero delay ward) பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

“ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்காக மொத்தம் 1914 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதிகள் உள்ளன. இதில் ஐசியூ (ICU) படுக்கைகளும், வென்டிலேட்டர் கொண்டு 45 படுக்கைகள் (CPAP Machine) இணைத்து 194 படுக்கைகளும் செயல்பாட்டில் உள்ளன. திரவ ஆக்சிஜன் பயன்பாட்டினைக் குறைத்து அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளை மேம்படுத்த ஆக்சிஜன் செறிவூட்டும் 416 கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், கோவிட் மருத்துவ சிகிச்சைக்காக டவர்-3, 7-வது மாடியில் கூடுதலாக 136 மருத்துவ வசதிகள் கொண்ட படுக்கைகள் தற்பொழுது பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவசர ஊர்தியில் வரும் கோவிட் நோயாளிகள் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலையில் அதை எதிர்கொள்ளும் வகையில் ஒரு நிமிட தாமதம் கூட இல்லாமல் அந்நோயாளிகளின் நிலையை மருத்துவக் குழு சென்று அவர்களைப் பரிசோதித்து நோயாளிகளின் நோய்த் தன்மைக்கு ஏற்றவாறு (Triage) செய்யப்படுகின்றனர்.

அதனுடன் முதற்கட்ட சிகிச்சையாக Inj. Dexamethasone, Inj. LMWH and IV fluids ஆரம்பித்து அவர்களுக்குத் தேவையான பிராணவாயு கொடுக்கப்படுகின்றது. அவசர ஊர்தியில் பிராண வாயு தீரும் நிலையில் கோவிட் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி, கரோனா பூஜ்ஜிய தாமத ((Zero Delay) வார்டில் சேர்க்கப்படுகின்றனர். ஆக்சிஜன் படுக்கை காலியாகும்போது பேட்டரி கார் மூலம் நோயாளிகள் அவர்களுக்குத் தேவைப்படும் நோய் தகுதிக்கு ஏற்ப வார்டுகளில் சேர்க்கப்படுகின்றனர்”

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், குடும்ப நலத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x