Published : 22 May 2021 11:45 AM
Last Updated : 22 May 2021 11:45 AM

சட்டப்படி மணந்த இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதிய பலன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியரின் பணி ஆவணங்களில், அவரது இரண்டாவது மனைவியை வாரிசுதாரராக குறிப்பிட்டு, திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றிய கலியமூர்த்தி என்பவர், தனது பணி ஆவணங்களில் வாரிசுதாரராக சேர்க்கப்பட்டுள்ள முதல் மனைவியின் பெயரை நீக்கி விட்டு இரண்டாவது மனைவியின் பெயரைச் சேர்த்து புதிய பென்ஷன் உத்தரவை பிறப்பிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது, “முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும். பணி ஓய்வு பெற்ற தனது மரணத்துக்குப் பின் உரிய சலுகைகள் இரண்டாவது மனைவிக்கு கிடைக்கும் வகையில் பணி ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்களில் திருத்தம் செய்ய கோரி மனு அளித்தும், போக்குவரத்து கழகம் அதை பரிசீலிக்கவில்லை” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கலியமூர்த்தி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட இரண்டாவது மனைவியின் பெயரை வாரிசுதாரராக மாற்றி பதிவு செய்ய எந்த தடையும் இல்லாததால், ஒரு மாதத்தில் அவரது பணி ஆவணங்களில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும், அதன் பின் 30 நாட்களில் புதிய பென்ஷன் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x