Published : 14 Dec 2015 07:37 PM
Last Updated : 14 Dec 2015 07:37 PM

கடலூர், காஞ்சி, திருவள்ளூர், தூத்துக்குடியில் குடிசைகள் சேதம்: மத்திய அரசு திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்ட தலா ரூ.1.5 லட்சம் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் குடிசைகளை இழந்த ஒரு லட்சம் பேருக்கு இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ.ஒன்றரை லட்சம் சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த குடும்பத்தினர் குடிசைகள், குடியிருப்புகள் மற்றும் உடமைகளை இழந்துவிட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தமிழக அரசு ஏற்கெனவே செய்து வருகிறது. பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அவர்களுக்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நிரந்தரமான மறுவாழ்வு மற்றும் குடியிருப்பு மறு கட்டமைப்புக்கு இது போதாது.

இவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். எனவே, சமீபத்திய வெள்ளத்தால் குடிசைகளை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடு அளிக்கப்படும் என நான் அறிவித்துள்ளேன். இந்த திட்டம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்திலும் செயல்படுத்தப்படுகிறது.

சென்னையில் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரைகளில் வசித்த 50 ஆயிரம் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்ந்து அதே பகுதியில் ஆபத்தான சூழலில் வசிக்க அனுமதிக்க முடியாது. அதே நேரம் சென்னையின் முக்கியமான நீர்வழித்தடங்களில், தண்ணீர் பிரச்சினையின்றி வெளியேறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, இந்த 50 ஆயிரம் குடும்பங்களில், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள வீடுகள் வழங்கப்படும். அவர்களை இந்த வீடுகளில் குடியற்றுவதற்கான பணி 2 வாரங்க்ளில் தொடங்கப்படும். பல்வேறு கட்டங்களாக இப்பணி ஓராண்டுக்குள் முடியும். அதுவரை, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக தற்காலிக குடியிருப்புகளை தமிழக அரசு வழங்கும்.

மீதமுள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் வசிக்கும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கும், இது தவிர சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள இதர நீர்வழிப்பாதைகள், நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கும், தமிழக அரசிடம் ஆங்காங்கே உள்ள இடங்களில் 50 ஆயிரம் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டப்படி, 380 சதுரடியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ஒரு வீடு கட்ட ரூ.10 லட்சம் செலவாகும். இந்த சிறப்பு வீடு கட்டும் திட்டத்திற்கு மொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடி ஆகும். இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நிலத்தின் விலை ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளதால், அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும். ஏற்கெனவே உள்ள அனைவருக்கும் வீட்டுவசதி திட்டப்படி, பயனாளிகளும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். தற்போதுள்ள சூழலில் பொதுமக்களால் பங்களிப்பை அளிக்க இயலாது என்பதால், சிறப்பு திட்டத்தின் கீழ் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மத்திய அரசின் பங்குத் தொகையையும் அதிகரிக்க வேண்டும்.

மேலும், வெள்ளத்தால் நீர்நிலைகளின் அருகில் குடிசைப்பகுதிகளில் வசித்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை வேறிடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மத்திய வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு அப்பகுதியிலேயே வீடு கட்டித்தரலாம். இதற்கு மத்திய அரசின் பங்காக ஒன்றரை லட்சம் ரூபாயை வழங்கலாம். இந்த அடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு வீடு கட்ட வீட்டுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் அடிப்படையில் ரூ.750 கோடி ரூபாயை சிறப்பு ஒதுக்கீடாக அளிக்க வேண்டும். தமிழக அரசு ஒரு வீட்டுக்கு ரூ.ஒரு லட்சம் என ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மறு கட்டமைப்புக்காக வழங்கப்படும். மேலும், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் ஒரு லட்சம் குடிசைகள் பகுதியாகவும், முழுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அந்த பகுதியில் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் கட்டுவதற்கான தொகையை ரூ.ஒன்றரை லட்சமாக அதிகரிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான சிறப்பு ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்.

இந்த சிறப்பு ஒதுக்கீடுகளை வழங்க, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறைக்கு தாங்கள் அறிவுறுத்தினால், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை தமிழக அரசு விரைவாக தொடங்கும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x