Last Updated : 20 Dec, 2015 01:05 PM

 

Published : 20 Dec 2015 01:05 PM
Last Updated : 20 Dec 2015 01:05 PM

தமிழக மக்களின் கண்ணீர் துடைக்க உதவ வேண்டும்: வங்கிகளுக்கு அருண் ஜேட்லி அறிவுரை

தமிழக மக்களின் கண்ணீர் துடைக்க வங்கிகள் உதவ வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் மாநில அளவிலான வங்கியாளர் குழு மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் தொடங்கியது.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்காக அருண் ஜேட்லி நேற்றிரவு சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களும் எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நான் இங்கு வந்துள்ளேன்.

இந்தப் பயணத்தின் நோக்கம் தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான வங்கி உதவிகளும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதே.

இந்த இயற்கைச் சீற்றம் ஏற்படுத்தியுள்ள பேரழிவு மனித திறமைகளுக்கு சவால் விடுக்கக் கூடியது. இயற்கைப் பேரிடர்களை மனிதர்களால் தடுக்க முடியாது. ஆனால் பேரிடருக்குப் பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க தேவையான உதவிகளை செய்ய முடியும்.

அதை உறுதிப்படுத்துவதற்காக, அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள், 26 பொதுத்துறை வங்கிகள், 17 தனியார் வங்கிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான கடனுதவியை வங்கிகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் துடைக்கப்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து இழப்பீடு கோரி 11,000 விண்ணப்பங்கள் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களுக்கு வந்துள்ளன. உடைமைகளை இழந்து காப்பீடு கோரியவர்களுக்கு 4 வாரங்களுக்குள் காப்பீட்டு பலன் வழங்குவதை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 176 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், முத்ரா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக வங்கிகள் வழங்கும் கடனுதவிகளை கண்காணிக்க டெல்லியில் இருந்து ஆய்வுக் குழு அனுப்பப்படும்.

இந்த மழை நமக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் காப்பீடு செய்து கொள்வதில்லை. காப்பீடு செய்து கொள்வதில் நம் சமூகம் பின் தங்கியுள்ளது. இந்த பேரிடர் காப்பீட்டின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

தமிழகத்தில் இயல்புநிலை திரும்ப மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x