Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

தென் மாவட்டங்களை தேடி வரும் சட்டப்பேரவைத் தலைவர் பதவி

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் தென்மாவட்டங்களைச் சேர்ந்தோரே அதிக முறை பேரவைத்தலைவர் பதவியை வகித்துள்ளனர்.

விடுதலைக்குப் பின்பு தமிழக சட்டப்பேரவையின் முதல் தலைவராக சிவசண்முகம் பிள்ளை 1952-ல் பொறுப்பேற்றார். அதற்குப் பின்பு கோபாலமேனன், கிருஷ்ணாராவ் ஆகியோர் பேரவைத் தலைவராகினர். 1962-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.செல்லப்பாண்டியன் முதன்முதலாக பேரவைத் தலைவராகி 1967 வரை செயல்பட்டார்.

அதற்குப் பின்பு அண்ணா தலைமையிலான திமுக அரசில் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனார்பேரவைத் தலைவரானார். ஓராண்டு மட்டுமே பதவி வகித்தசி.பா. ஆதித்தனார் அண்ணாவின் மறைவுக்குப் பின்பு கருணாநிதிஅமைச்சரவையில் அமைச்சரானார்.

1969 முதல் 1971 வரை பேரவைத் தலைவராக புலவர் கோவிந்தன் பொறுப்பு வகித்தார். 1971 முதல் 1972 வரை பேரவைத் தலைவராக இருந்த திமுகவின் மூத்த தலைவரான கே.ஏ.மதியழகன் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவி விலக்கப்பட்டார். மீண்டும் புலவர் கோவிந்தனே பேரவைத் தலைவராகி 1977 வரை செயல்பட்டார்.

எம்ஜிஆர், புதிய கட்சி தொடங்கி1977-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வரானபோது முனு ஆதி பேரவைத் தலைவரானார். ஆட்சியை கலைத்தபின்பு நடந்த தேர்தலில் வென்று1980-ல் மீண்டும் எம்ஜிஆர் முதல்வரானபோது க.ராஜாராம் பேரவைத் தலைவரானார்.

1985-ல் முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜிஆர், நெல்லையைச் சேர்ந்த பி.எச்.பாண்டியனை பேரவைத் தலைவராக்கினார். சட்டம் படித்தவரான பி.எச்.பாண்டியன், பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்பதை நிரூபித்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்பு 1989-ல் திமுக ஆட்சியை பிடித்தபோது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தொகுதி எம்எல்ஏ தமிழ்க்குடிமகன் பேரவைத் தலைவரானார்.

1991-ல் முதன்முறை முதல்வரான ஜெயலலிதா, மதுரையைச் சேர்ந்த சேடபட்டி முத்தையாவை பேரவைத் தலைவராக்கினார்.

1996 முதல் 2001 வரை கருணாநிதி தலைமையிலான ஆட்சியின்போது மதுரையைச் சேர்ந்த பிடிஆர். பழனிவேல் ராஜன் பேரவைத் தலைவரானார். 2001-ல் ஜெயலலிதா, மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான கா.காளிமுத்துவை பேரவைத் தலைவராக்கினார். 2006-ல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, நெல்லையைச் சேர்ந்த ஆவுடையப்பனை பேரவைத் தலைவராக்கினார்.

2011 முதல் 2012 வரை ஜெயக்குமார் பேரவைத் தலைவராக இருந்தார். அதற்கு பின்பு 2021 வரை தனபால் பேரவைத் தலைவராக இருந்தார். 2021 ஏப்.6-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றிபெற்று பேரவைத் தலைவராக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு தேர்வாகியுள்ளார். இதன்மூலம் பேரவை வரலாற்றில் அதிக ஆண்டுகள் பேரவைத் தலைவர் பதவியை தென்மாவட்டங்களைச் சேர்ந்தோரே அலங்கரித்துள்ளனர். பேரவைத் தலைவராக பதவி வகித்த 18 பேரில் 8 பேர் தென்மாவட்டத்தினர். 9-வது நபர் அப்பாவு ஆவார்.

நெல்லையைச் சேர்ந்தவர்களில் பேரவைத் தலைவராக எஸ்.செல்லப்பாண்டியன் முதலாவதாகவும், சி.பா.ஆதித்தனார் 2-வதாகவும், 3-வதாக பிஎச்.பாண்டியனும், 4-வதாக ஆவுடையப்பனும் பதவி வகித்தனர். 5-வதாக அப்பாவு தேர்வானதன் மூலம் அதிக பேரவைத் தலைவர்களைக் கொண்ட மாவட்டம் என்ற பெருமை நெல்லைக்குக் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x