Published : 30 Apr 2021 17:33 pm

Updated : 30 Apr 2021 17:33 pm

 

Published : 30 Apr 2021 05:33 PM
Last Updated : 30 Apr 2021 05:33 PM

கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்; வெற்றி மாலை சூடத் தயாராகுங்கள்: அதிமுகவினருக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோள்

eps-ops-writes-letter-to-partymen
ஓபிஎஸ் - ஈபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என, அதிமுகவினரை ஓபிஎஸ் - ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக, தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஏப். 30) கூட்டாக வெளியிட்ட அறிக்கை:


"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இரட்டை இலையே என்றென்றும் வெல்லும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாக இருக்கும் சூழ்நிலையில், 'வாக்குக் கணிப்பு', 'எக்சிட் போல்' என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித் தொகுப்புகள், அதிமுக உடன்பிறப்புகள் யாருக்கும் எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம்.

அதிமுக என்னும் ஆலமரம் எந்த சலசலப்புக்கும் அசைந்துவிடாமல், அண்டிவந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் கற்பக விருட்சம் என்பதே உண்மை. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள், அதிமுக வரலாறு வியக்கும் வகையில், இந்தத் தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று ஜெயலலிதா அரசை அமைக்கும் என்றே உறுதிபடத் தெரிவிக்கின்றன.

2016 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் வந்த அனைத்துக் கருத்துக் கணிப்புகளும், வாக்குக் கணிப்புகளும் அதிமுகவின் வெற்றியைக் குறிப்பிடவே இல்லை; மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முதல் நாள் வரை சொல்லிக்கொண்டிருந்தன.

ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே, 2016-ல் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்ததையும், பிறகு அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைத்ததையும் நாம் பார்த்தோம்.

இப்போது வெளியிடப்பட்டு வரும் கணிப்பு முடிவுகள் அதிமுக உடன்பிறப்புகளைச் சோர்வடையச் செய்து, வாக்கு எண்ணிக்கையின்போது நமது செயல்பாடுகளை முடக்கி, நம்மை ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் செய்வதற்கான முயற்சிகளே தவிர வேறல்ல.

நம்மை சோர்வடையச் செய்வதற்கான சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்றுங்கள். ஒரு வாக்கு கூட நம்மிடம் இருந்து பறிக்கப்படாத வண்ணம் சுற்றிச், சுழன்று கடமையாற்றுங்கள்.

* திமுகவினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்குக் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துத் தீர்வு காண வேண்டும்.

* அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்துச் சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கிருந்து வெளியே வர வேண்டும்.

எம்ஜிஆர் ஆட்சி அமைக்க முடியாது என்றும், ஜெயலலிதாவின் தோல்வி உறுதி என்றும் பகிரங்கமாக சத்தியம் செய்தவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில், மக்கள் நம் இயக்கத்தை இமயத்தின் உச்சியில் வீற்றிருக்க வைத்தனர். அந்த நிலையே இப்போதும் தொடரப் போகிறது.

களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லும்!

கடமைகள் அழைக்கின்றன; கண்மணிகளே, வெற்றி மாலை சூடத் தயாராகுங்கள்!!".

இவ்வாறு ஓபிஎஸ் - ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

தவறவிடாதீர்!கருத்துக்கணிப்புகள்ஓ.பன்னீர்செல்வம்எடப்பாடி பழனிசாமிஅதிமுகஜெயலலிதாExit pollsO panneerselvamEdappadi palanisamyAIADMKJayalalithaaPOLITICSதேர்தல் 2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x